வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: டெல்லியில் போராடிய மற்றொரு விவசாயி தற்கொலை  

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: டெல்லியில் போராடிய மற்றொரு விவசாயி தற்கொலை  
Updated on
2 min read

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடிய 40 வயது விவசாயி நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

மத்திய அரசுடன் நேற்று எட்டாம் கட்டப் பேச்சுவார்த்தையிலும் பலனில்லாமல் போன செய்தி போராட்ட எல்லைகளுக்கு எட்டியது. இதையடுத்து, போராட்ட மேடைகளில் விவசாயிகள் ஆக்ரோஷத்துடன் கோஷம் எழுப்பினர்.

இவர்களில் ஒருவராக பஞ்சாப்பின் பத்தேஹாபாத் சாஹேப்பைச் சேர்ந்த அம்ரேந்தர் சிங் இடம் பெற்றிருந்தார். இவர் கடந்த சில நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் இணைந்தார். கோஷங்களுக்கு இடையே திடீர் என மேடையின் பின்பகுதிக்குச் சென்ற அம்ரேந்தர் சிங், திடீரென முடிவு எடுத்து, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

போராட்டக் களத்தில் இதை சற்றுத் தாமதமாகக் கண்ட சக விவசாயிகள், அம்ரேந்தரை அருகிலுள்ள சோனிபத்தின் பேமஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அம்ரேந்தர் பரிதாபமாக மாலை 7.15 மணிக்கு உயிரிழந்தார். இறப்பதற்கு முன் அவர் உடனிருந்த விவசாயிகளிடம், மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்கவில்லை எனக் கவலையுடன் பேசியுள்ளார்.

இதன் மீது சோனிபத் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனர். அம்ரேந்தரின் உடல் உடற்கூறு ஆய்வு முடித்து இன்று சக விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

அம்ரேந்தரின் குடும்பத்தார் குறித்து தகவல் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுபோல், விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்வது முதன்முறையல்ல.

கடந்த 2ஆம் தேதி டெல்லியின் காஜியாபாத்திலுள்ள உ.பி. கேட் பகுதியில், அங்குள்ள கழிவறையில் தற்கொலை செய்த காஷ்மீர் சிங்கிற்கு வயது 75. இதற்கு முன்பாக காஷ்மீர் சிங் தனது இறுதி விருப்பத்தைக் கடிதத்தில் எழுதியிருந்தார்.

டிசம்பர் 20இல் டெல்லி எல்லையில் 22 வயது குர்லாப் சிங் தற்கொலை செய்து கொண்டார். பஞ்சாப்பின் பட்டிண்டா மாவட்டத்தின் தயாள்புரா மிர்சா கிராமத்தைச் சேர்ந்த இவர், விஷம் அருந்தி உயிரிழந்தார்.

இதன் மறுநாள், நிரஞ்சன்சிங் எனும் 65 வயது விவசாயி தற்கொலை செய்ய முயன்றார். பஞ்சாப்பின் தரண்தரண் மாவட்டத்தை சேர்ந்த இவர் தற்கொலைக்காக விஷம் அருந்தி இருந்தார்.

டிசம்பர் 16இல் 65 வயது சந்த் பாபா ராம்சிங் என்பவர் கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் முன்னதாக எழுதிய கடிதத்தில் விவசாயிகள் போராட்டத்தை முடித்து வைக்க மத்திய அரசு அக்கறை காட்டவில்லை எனப் புகார் எழுப்பியிருந்தார்.

இந்தத் தற்கொலைகள் அல்லாமல், கடும் குளிர், உடல்நலக் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் இதுவரை ஐம்பதிற்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதனால், போராட்டத்திற்குத் தலைமை ஏற்றுள்ள விவசாய சங்கங்களின் தலைவர்களுக்கும் சிக்கலாகி உள்ளது.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அம்மாநிலத்தின் உத்தரப் பிரதேசம், ஹரியாணா மற்றும் பஞ்சாப் எல்லைகளில் இந்தப் போராட்டம் 46-வது நாளாகத் தொடர்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in