

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சார்பில் இன்று டெல்லியின் பல்வேறு எல்லைகளில் 2,500 டிராக்டர்கள் மூலம் பேரணி நடத்தினர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மழை, கடும் குளிர் எனவும் பாராமல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 50 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 7 சுற்றுப் பேச்சுவார்த்தை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடந்தும் எந்த விதமான தீர்வும் எட்டப்படவில்லை. இதனிடையே நாளை 8-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடக்கிறது.
இந்தச் சூழலில் வரும 26-ம் தேதி டெல்லியில் குடியுரசு தின விழா நடக்கும்போது, அதில் நடக்கும் வாகன அணிவகுப்பு முடிந்தபின், டெல்லி ராஜபாதையை நோக்கி விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் சங்கத்தினர் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் அதற்கு முன்னோட்டமாக இன்று டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடந்தது.
பாரதி கிசான் சங்கத்தின் தலைவர் ஜோகிந்தர் சிங் அக்ராஹன் கூறுகையில், “வரும் 26-ம் தேதி டிராக்டர் பேரணியில் 3500 டிராக்டர்கள் பங்கேற்கின்றன. வரும் 26-ம் தேதி நடக்கும் டிராக்டர் பேரணிக்கான ஒத்திகையாகவே இன்று நடத்தப்படுகிறது. ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில எல்லைகளில் இருந்து டெல்லி நோக்கி டிராக்டர்கள் புறப்படும்” எனத் தெரிவித்தார்.
இன்று காலை 11 மணி அளவில் குந்த்லி-மனேசர் பால்வால் சாலையில் விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி முதலில் தொடங்கியது. இந்தப் பேரணியையொட்டி டெல்லி, ஹரியாணா போலீஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
சிங்கு முதல் திக்ரி எல்லை, திக்ரி முதல் குந்த்லி, காஜிப்பூர் முதல் பல்வால், ரேவாஸான் முதல் பால்வால் வரை இன்று ஒத்திகையாக அடுத்தடுத்து டிராக்டர்கள் பேரணியாகப் புறப்பட்டன.
சம்யுக்த் கிசான மோர்ச்சாவின் மூத்த உறுப்பினர் அபிமன்யு கோஹர் கூறுகையில், “வரும் நாட்களில் விவசாயிகள் சார்பில் போராட்டம் தீவிரப்படுத்தப்படும். இன்று நடந்த பேரணியில் ஹரியாணாவில் இருந்து 2,500 டிராக்டர்கள் பேரணியில் பங்கேற்றன. எங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால், போராட்டம் தீவிரமடையும் என அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்” எனத் தெரிவித்தார்.