போராட்டச் சூழலில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை; வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் வரும் 11-ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை எனத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், வேளாண் சட்டங்களுக்கு எதிரான அனைத்து மனுக்களையும், விவசாயிகள் போராட்டம் தொடர்பான மனுவையும் வரும் 11-ம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும் என இன்று தெரிவித்தது.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 40 நாட்களுக்கும் மேலாகப் போராடி வரும் விவசாயிகளால் போக்குவரத்து முடக்கம், பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. அவர்களை அப்புறப்படுத்தி வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
அதேபோல, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு காணொலி மூலம் விசாரித்து வருகிறது.
கடந்த மாதம் 17-ம் தேதி இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “அமைதியான முறையில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு உரிமை உண்டு. ஆனால், பேச்சுவார்த்தை ஏதும் நடத்தாமல் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தாலும் அர்த்தம் இல்லாமல் போகும்.
வேளாண் சட்டங்களில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க விவசாயிகள், அரசின் பிரதிநிகள் கொண்ட சார்பற்ற, சுயாட்சித் தன்மை கொண்ட குழுவை அமைத்துத் தீர்வு காணலாம் என நாங்கள் நினைக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டது. மத்திய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகினர்.
அப்போது, கே.கே.வேணுகோபால் கூறுகையில், “மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே ஆரோக்கியமான சூழலில்தான் பேச்சுவார்த்தை நடக்கிறது. எதிர்காலத்தில் நல்ல முடிவு கிடைக்க வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.
அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு கூறுகையில், “விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை எனப் புரிந்துகொள்கிறோம். இருப்பினும் மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு கிடைக்கும் என்பதால் அதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
இந்த மனுக்கள் அனைத்தையும் வரும் 11-ம் தேதி மொத்தமாக விசாரிக்கிறோம். வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களுக்கு மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்” எனத் தெரிவித்தனர்.
