

போராட்டத்திற்காக கொண்டு வந்த டிரக்கை டெல்லி எல்லையில் போராடும் விவசாயி ஒருவர் அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு தற்காலி வீடாக மாற்றி புதுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 7 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் வரும் 4ஆம்தேதி (நாளை) மீண்டும் வார்த்தைக்கு மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது.
இதற்கிடையில், டெல்லி சிங்கு எல்லையில் போராடிவரும் பஞ்சாப் விவசாயி ஒருவர் போராட்டத்திற்காக தான் கொண்டு வந்த டிரக் கண்டெய்னரை அனைத்து வசதிகளும் கூடிய ஒரு தற்காலி வீடாக மாற்றியுள்ளார்.
ஜலந்தரைச் சேர்ந்த ஹர்பிரீத் சிங் மாட்டு என்பவர் டிரக் கண்டெய்னரில் உருவாக்கியுள்ள தற்காலிக தங்குமிடத்தில் சோபா, படுக்கை, டிவி மற்றும் மொபைல் சார்ஜிங் இணைப்பு, ஒரு கழிப்பறை போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன.
இதுகுறித்து ஹர்பிரீத் சிங் மாட்டு ஏஎன்ஐயிடம் கூறியதாவது:
"டிசம்பர் 2 ம் தேதி அமெரிக்காவில் வசிக்கும் எனது மூத்த சகோதரரின் உத்தரவின் பேரில் நான் இங்கு வந்தேன். போராடும் விவசாயிகளுக்காக டெல்லி எல்லைக்கு சென்று சேவை செய்யச் சொன்னார். அதன்படி எனது எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு சிங்கு எல்லையில் பணியாற்றத் தொடங்கினேன். அப்போது என்னுடைய ஐந்து லாரிகள் போராடுபவர்களுக்கான உதவிப்பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தன.
அந்த நேரத்தில் ஒவ்வொருநாளும் நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பியபோது, நான் வீடற்றவனாக உணர்ந்தேன், பின்னர் ஒரு டிரக்கை ஏன் தற்காலிக குடியிருப்பாக மாற்றக்கூடாது என்று நினைத்தேன். தனது தற்காலிக வீட்டை உருவாக்க இங்குள்ள நண்பர்கள் உதவினர், இது முடிவடைய ஒன்றரை நாட்கள் ஆனது.
பின்னர், குருத்வாரா சாஹிப் ரிவர்சைடு கலிபோர்னியா லங்கர் சேவா மையம் ஒன்றையும் சிங்கு எல்லையில் உள்ள போராட்ட இடத்தில் திறந்து வைத்துள்ளேன், இதன்மூலம் போராடும் விவசாயிகளுக்கு மட்டுமின்றி வழிபோக்கர்களுக்கும் சூடான தேநீர், தின்பண்டங்கள் மற்றும் உணவு ஆகியவை பரிமாறப்படுகிறது.
எனது லங்கர் தேநீர் மையத்தில் காலை முதல் மாலை வரை எந்தநேரமும் பரிமாறப்படுகிறது. பின்னி, பக்கோடாக்கள், பாதாம் லங்கரும் அங்கு வழங்கப்படுகிறது. லங்கர் சேவா ஒவ்வொரு நாளும் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுகின்றனர். இதற்காக எனது மனைவி, மகன், மருமகன் மற்றும் 80-90 உதவியாளர்களைக் கொண்ட குழு எனக்கு உதவியாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு ஹர்பிரீத் சிங் மாட்டு தெரிவித்தார்.