

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் குறித்து அவதூறாகக் கருத்துக்கள் தெரிவித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், குஜராத் துணை முதல்வர் நிதின்படேல், பாஜக தலைவர் ராம் மாதவ் ஆகியோருக்கு எதிராக விவசாயிகள் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
இவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும், தாங்கள் பேசியவார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டும் இல்லாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
அமர்தசரஸைச் சேர்ந்த விவசாயி ஜாஸ்கரன் சிங் பந்தேஸா, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் “ விவசாயிகள் போராட்டத்தில் வெளிநாட்டு சக்திகள் புகுந்துவிட்டன.இந்த போராட்டத்தால் விவசாயிகளுக்கு பலன் இல்லை. காலிஸ்தான், ஷர்ஜீல் இமாம் போன்ற அமைப்புகள்தான் நடத்துகின்றன என கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த தேசத்துக்கே விவசாயிகள் தங்கள் ரத்தத்தை வியர்வையாக மாற்றி உணவு வழங்கிவருகிறோம், நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகள் இருக்கிறார்கள், பொருளதாாரத்தின் முக்கியத் தூணாக வேளாண்துறை இருக்கும் போது விவசாயிகள் குறித்து அவதூறாகப் பேசிய அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்புக் கோர வேண்டும்.
பல்வேறு முக்கிய பதவியில் இருப்பவர்கள் நல்லெண்ணத்துடன், பொறுப்புடன் கருத்துக்களை வெளியிடுவதில்லை. அவதூறு பரப்பும் நோக்கத்துடன், ஒருசார்புடன்தான் விவசாயிகள் போராட்டத்தை அணுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜலந்தரைச் சேர்ந்த விவசாயி ராம்னீக் சிங் ராந்தவா , குஜராத் துணை முதல்வர் நிதின் படேலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் “ விவசாயிகள் எனும் பெயரில் சமூகவிரோத சக்திகள், தீவிரவாதிகள், காலிஸ்தானிகள், கம்யூனிஸ்ட்கள், சீன ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
விவசாயிகளிடம் பீட்சா, பக்கோடி போன்ற உணவுகள் வெளிநாட்டு சக்திகள் மூலம் இலவசமாக வழங்கப்படுகின்றன. லட்சக்கணக்கான ரூபாய்களை போராட்டக்காரர்களுக்கு இவர்கள் வழங்குகிறார்கள் என நிதின் படேல் தெரிவித்துள்ளார். ஆதாரமற்ற இந்த பேச்சுக்கு நிதின் படேல் மன்னிப்புக் கோர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
சங்ரூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சுக்விந்தர் சிங் சித்து , பாஜக தலைவர் ராம் மாதவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ராம் மாதவ் தனது ட்விட்டர் பதிவில் விவசாயிகள்போராட்டம் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டிருந்ததால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விவசாயிகள் பாஜக தலைவர்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் மீது தேவையான சட்ட உதவிகள் இலவசமாக வழங்கப்படும் என பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர் ராகவ் சத்தா தெரிவித்துள்ளார்.