விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்: வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக 850 கல்வியாளர்கள் கையெழுத்துப் பிரச்சாரம் 

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக, பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 850-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கையெழுத்துப் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஒரு மாதத்துக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், ஆதரவாகக் கல்வியாளர்கள் புறப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை ஆதரித்து கல்வியாளர்கள் எழுதிய கடிதத்தில் “ மத்திய அரசு விவசாயிகளுக்கு அளித்துள்ள வாக்குறுதியை நம்புகிறோம். விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்றும், அவர்களின் உணவு தட்டிலிருந்து பறிக்கப்படாது என்று மத்திய அரசு கூறுவதை நாங்கள் நம்புகிறோம்.

அனைத்துவிதமான தடைகளில் இருந்தும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சுதந்திரமாக விற்க புதிய வேளாண் சட்டங்கள் வகை செய்கின்றன. தங்களுக்கு போட்டியான விலையுடன் ஒப்பிட்டு விற்க முடியும் என்பதை வேளாண் சட்டங்கள் உறுதி செய்கிறது.

விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை இந்த வேளாண் சட்டங்கள் ரத்து செய்யாது என மத்திய அரசு தொடர்ந்து உறுதியளித்திருக்கிறது.

இந்த நேரத்தில் நாங்கள் மத்திய அரசுடனும், விவசாயிகளுடன் துணை நிற்கிறோம். விவசாயிகளின் தீவிரமான நிலைப்பாட்டை வணங்குகிறோம்” எனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த கடிதத்தில் டெல்லி பல்கலைக்கழகம், பனாராஸ் இந்து பல்கலைக்கழகம், ஜேஎன்யு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் கல்வியாளர்கள் கையொப்பமிட்டுள்ளார்கள்.

விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே இதுவரை 6 கட்டப் பேச்சு நடந்து முடிந்துள்ளது. ஆனால், இதுவரை எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை.

புதன்கிழமை நடந்த பேச்சில் விவசாயிகளின் இரு கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. விளைநிலங்களில் கழிவுகளை எரிப்பதில் பாகுபாடு காட்டுதல், மற்றும் மின் மானியம் பரிசீலிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. ஆனால், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுதல், குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யும்சட்டம் ஆகியவற்றில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in