

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 6 பேருக்கு உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் 6 பேரையும் தனிமை அறையில் வைத்து கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பிரிட்டனிலிருந்து தெலங்கானாவுக்கு வந்த 279 பயணிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதில் 184 பயணிகள் தவறான முகவரியை அளித்துள்ளார்கள் என்று தெலங்கானா சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்து பகுதியில் கரோனா வைரஸில் புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது.
பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. இந்தியாவும் டிசம்பர் 31-ம் தேதி வரை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு விமானங்களை இயக்கத் தடை விதித்துள்ளது.
பிரிட்டனில் இருந்து தெலங்கானாவுக்கு சமீபத்தில் வந்த 279 பயணிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்களில் 184 பயணிகள் தவறான முகவரியை அளித்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், பிரிட்டனில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா வழியாக தெலங்கானாவுக்கு வந்த 93 பயணிகள் முகவரியை ஆய்வு செய்தபோதிலும் அந்த முகவரியில் அவர்கள் கிடைக்கவில்லை. அவர்களின் தொலைபேசி எண்ணும் தவறாக இருந்தது.
இந்நிலையில் பிரிட்டனில் இருந்து வந்த பயணிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 21 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பெங்களூருவில் உள்ள ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 3 பேருக்கு உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹைதரபாத்தில் உள்ள செல்லியல் நுண் உயிரிழல் துறை ஆய்வகத்தில் நடந்த சோதனையிலும் 2 பேருக்கும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தள்ளது.
புனேயில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்தில் நடந்த சோதனையில் ஒருவருக்கு உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் 6 பேரையும் தனிமை அறையில் வைத்து கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.