

மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளை மதிக்கவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விவசாய சீர்திருத்தங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 28வது நாளாக நடைபெற்று வருகிறது.
புதிதாக இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் விவசாயிகள் அமைப்புகள் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கேரள முதல்வர் பேசியதாவது:
"எங்கள் நாடு பல வரலாற்று போராட்டங்களைக் கண்டுள்ளது, அவற்றில் மிகப் பெரிய போராட்டங்கள் விவசாயிகளால் நடத்தப்பட்டவை. கேரளாவில் கூட இதுபோன்ற பல போராட்டங்கள் நடந்துள்ளன.
இந்தியாவில் மிகப்பெரிய விவசாயிகளின் போராட்டங்களில் ஒன்று இப்போது நடந்துகொண்டிருக்கிறது.
விவசாயிகளை நாம் அன்னதாதா (உணவளிப்போன்) என்று அழைக்கிறோம். இன்று விவசாயிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் மத்தியில் ஆளும் தற்போதைய பாஜக அரசாங்கம் அவர்களை மதிக்கவில்லை.
பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் (என்.சி.எஃப்) சமர்ப்பித்த அறிக்கையில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை அமல்படுத்தப்படும் என்று கடந்த காலத்தில் பாஜக கூறியது. சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை செயல்படுத்துவோம் என்று கூறிய அதே கட்சிதான் இன்று நாட்டை ஆளுகிறது.
சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக, ஒவ்வொருமுறையும் மக்களவை தேர்தலுக்கு முன்பு மட்டுமே அவர்கள் அதை நினைவில் வைத்திருக்கிறார்கள்.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.