

வேளாண் சட்டங்கள் குறித்து மக்களிடையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பஞ்சாப் ஏக்தா கட்சித் தலைவரும், எம்எல்ஏவுமான சுக்பால் சிங் கைரா பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியின் பல்வேறு எல்லைகளிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 21-வது நாளை எட்டியுள்ளது. பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநில விவசாயிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், புதிய வேளாண் சட்டம் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென பஞ்சாப் ஏக்தா கட்சித் தலைவரும், எம்எல்ஏவுமான சுக்பால் சிங் கைரா பிரதமர் நரேந்திர மோடிக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
''வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாய சங்கங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான தற்போதைய தடையை முதலில் நீக்க வேண்டும். அதற்கு ஒரே தர்க்கரீதியான மற்றும் ஜனநாயக ரீதியான தீர்வு வாக்கெடுப்புதான் என்று தோன்றுகிறது.
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து உழவர் சங்கங்கள் பஞ்சாப்பில் தங்கள் போராட்டங்களைத் தொடங்கியபோதே செப்டம்பரில் விவசாயிகளைத் தாங்கள் சந்தித்திருக்க வேண்டும். இப்போது நிறைய தடைகள் ஏற்பட்டுள்ளன. மத்திய அரசு ஒருபக்கம் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னொரு பக்கம் பிற்போக்கு வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.
ஆனால், விவசாயிகள் அவற்றைக் கடுமையாக எதிர்க்கின்றனர். எனவே வேளாண் சட்டங்கள் வேண்டுமா, வேண்டாமா என பஞ்சாப், ஹரியாணா மக்களிடையே ஒரு வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென நான் பரிந்துரைக்கிறேன்''.
இவ்வாறு பஞ்சாப் ஏக்தா கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.