வலுக்கும் விவசாயிகள் போராட்டம்: டெல்லி - சிங்கு எல்லையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் இணைவதாகத் தகவல்

டெல்லி சிங்கு எல்லையில் கூடாரம் அமைத்துத் தங்கியுள்ள விவசாயிகள்: படம் | ஏஎன்ஐ.
டெல்லி சிங்கு எல்லையில் கூடாரம் அமைத்துத் தங்கியுள்ள விவசாயிகள்: படம் | ஏஎன்ஐ.
Updated on
1 min read

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 20-வது நாளை எட்டியுள்ளது. டெல்லி-சிங்கு எல்லையில் அடுத்த சில நாட்களில் 2 ஆயிரம் பெண்கள் இணைய உள்ளதாக விவசாய சங்கங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியின் பல்வேறு எல்லைகளிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 20-வது நாளை எட்டியுள்ளது. பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநில விவசாயிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுடன் நடத்திய 5 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த 40 தலைவர்கள் நேற்று டெல்லி எல்லையின் பல்வேறு பகுதிகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் வகையில், டெல்லி-சிங்கு எல்லையில் அடுத்த சில நாட்களில் விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பெண்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் இருந்து பெண்கள் போராட்டத்தில் பங்கேற்க இருப்பதால், அவர்களுக்குத் தேவையான தங்குமிடங்கள், கழிப்பறை வசதி, சமையல்கூடம் ஆகியவற்றைத் தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே விவசாயிகள் டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிபூர் உள்ளிட்ட எல்லைகளில் ஆயிரக்கணக்கில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பெண்களும் சேரும்போது போராட்டம் தீவிரமாகும்.

இதுகுறித்துபோலீஸார் தரப்பில் கூறுகையில், “டெல்லி எல்லைகளான சிங்கு, அச்சாண்டி, மணியாரி, சாபோலி, மன்கேஷ் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. வரும் வாகனங்கள் அனைத்தும் லாம்பூர், சாபியாபாத், சிங்கு பள்ளி சுற்றுச்சாலை வழியாக முகார்பாவிலிருந்து ஜிடிகே சாலைக்குத் திருப்பி விடப்படுகின்றன.

ரிங்ரோட் புறச்சாலை, ஜிடிகே சாலை, என்ஹெச்44 ஆகியவற்றில் செல்வதைத் தவிர்க்கமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். காசியாபாத் - டெல்லி இடையிலான பாதை மூடப்பட்டுள்ளது. ஆனந்த் விஹார், டிஎன்டி, சிலா, அப்சலா, போப்ரா எல்லை வழியாகச் செல்ல வாகனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

போராட்டம் தீவிரமடைந்து வருவதால் டெல்லி எல்லைகளில் அதிகமான போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டு வருகின்றனர். தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனம், லாரிகள், கன்டெய்னர்கள், இரும்புத் தடுப்புகளும் கொண்டு வரப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in