

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் இடையே, ஒரு இளம் விவசாயி தனது மகளின் முதல் பிறந்த நாளைப் போராட்டத்தில் ஈடுபடும் சக விவசாயிகளுடன் சேர்ந்து நேற்று கேக் வெட்டிக் கொண்டாடினார்.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டெல்லி, ஹரியாணா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நவம்பர் 26-ம் தேதி முதல் டெல்லியின் புறநகரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 19-வது நாளை எட்டியுள்ள நிலையில், விவசாயிகள் சங்கங்களைக் சேர்ந்த 40 தலைவர்கள் டெல்லியின் பல்வேறு எல்லைகளில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்கள்.
இதற்கிடையில் திக்ரி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தின் இடையே, விவசாயி ஜகத் சிங் என்பவர் தனது மகளின் முதல் பிறந்த நாளை நேற்று கேக் வெட்டிக் கொண்டாடினார்.
தனது மகளின் பிறந்த நாளை வீட்டில் குடும்பத்தினர் கொண்டாடும் அதே தருணத்தில் , போராட்டக் களத்தில் உள்ள விவசாயி ஜகத் சிங் அங்கிருந்தபடியே மகளின் பிறந்த நாளைத் தனித்துவமான முறையில் கொண்டாடினார்.
சக விவசாயிகள் போராட்டக் களத்தை வண்ணமயமான பலூன்கள் மற்றும் சுவரொட்டிகளால் அலங்கரித்தனர். குழந்தை சிதாக் மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ள சுவரொட்டிப் பின்னணியில் எளிய விழாவாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சக விவசாயிகள் பலரும் ஜகத் சிங்கின் 'சிதாக்' என்ற பெண் குழந்தைக்குப் தங்கள் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சிதாக்கிற்காக ''ஹேப்பி பர்த்டே'' பாடலைப் பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து விவசாயி ஜகத் சிங் ஏஎன்ஐயிடம் கூறுகையில், "தனது தாய் மற்றும் எங்கள் உறவினர்களுடன் எனது மகள் தனது முதல் பிறந்த தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். நாங்கள் எங்கள் வீடுகளை விட்டு வெளியேறியபோது, எங்கள் வெற்றிக்கு முன்னர் திரும்பி வரமாட்டோம் என்று சபதம் செய்திருந்தோம். எனது மகளின் தலைமுறைக்காகவும், அவர்களின் நில உரிமைகளைப் பெறுவதற்காகவும் நான் போராடுகிறேன்" என்று தெரிவித்தார்.