

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி (ஆர்எல்பி) விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு முடிவு எடுக்காவிட்டால், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் கடந்த 18 நாட்களாகப் போாரட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் நடத்திய 5 சுற்றுப் பேச்சும் தோல்வி அடைந்துள்ளது. நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
ஆனால், நேற்று முதலே பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா, கங்காநகர், பாரத்பூர், ஹனுமான்கார்க், ஆல்வார் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் விவசாயிகள் தீவிரமாகப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதிக்கப்படாது என்பதால் மூடப்பட்டன.
ராஜஸ்தானில் உள்ள மக்கள் அமைதி காக்க வேண்டும், அமைதியாகப் போராட வேண்டும். டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் போராடும் மக்கள் ஜனநாயக ரீதியில் போராட அனுமதி உள்ளது என்று முதல்வர் அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சியும் நேற்று விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது.
ஆர்எல்பி கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஹனுமான் பெனிவால் நேற்று கோட்புட்லி நகரில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை. பிரதமர் மோடி விவசாயிகள் மீது உண்மையில் அக்கறை கொள்பவராக இருந்தால், சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும்.
இந்தச் சட்டத்தைக் கொண்டுவரும் முன் மத்திய அரசு விவசாயிகளை அழைத்து ஆலோசித்திருக்க வேண்டும். ஆனால், யாரிடமும் மத்திய அரசு கலந்து ஆலோசனை செய்யவில்லை. நாங்களும் என்டிஏ கூட்டணியில் இருக்கிறோம். நாங்களும் விவசாயிகளின் மகன்கள்தான். விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டம் கொண்டுவரும்போது எங்களிடம் மத்திய அரசு ஆலோசித்திருக்க வேண்டும். இந்த வரைவு மசோதாக்களை யார் வடிவமைத்தது எனத் தெரியாது.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு முடிவு எடுக்காவிட்டால், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஆர்எல்பி கட்சி வெளியேறும். நான் எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன்''.
இவ்வாறு பெனிவால் தெரிவித்தார்.