

மத்திய அரசின் புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிராக டெல்லிஎல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தில், தேச விரோத குற்றச்சாட்டில் சிறையில் உள்ள, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜில் இமாம், முன்னாள் மாணவர் உமர் காலீத், சமூக செயற் பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், அருண் பெரைரா உள்ளிட்டோரின் புகைப்படங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பப்பட்டன. இவர்களை சிறையில்இருந்து விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தின் தொடக்க நாட்களில் அரசியல் கட்சியினர் மற்றும் சமூகப் போராளிகள் தங்கள் பிரச்சினைகளை இந்தமேடைகளில் எழுப்ப அனுமதிக்கப் படவில்லை.
டெல்லி ஷாஹீன்பாக் போராட்டக் கள பெண்கள் முன்பு இதே காரணத்துக்காக திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தச்சூழலில் இவர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டது சர்ச்சைக்குள்ளானது.
இந்த விவகாரத்தில் விவசாயிகள் போராட்டத்தை தேசவிரோத சக்திகளும், இடதுசாரிகளும் கைப்பற்றி விட்டதாக, மத்திய அமைச்சர்கள் சிலர் புகார் கூறினர்.
இதுகுறித்து விவசாயிகள் போராட்டக் குழுவின் தேசிய செய்தித் தொடர்பாளரும் பாரதியகிஸான் யூனியன் தலைவருமான ராகேஷ் திகாய்த் நேற்று கூறும்போது, “மத்திய அமைச்சர்களின் புகார் தவறானது. தேசவிரோத சக்திகள் எவரும் எங்களுடன் இல்லை. அவ்வாறு இருந்தால், மத்திய உளவுத் துறையிடம் அறிக்கை பெற்று அவர்களை அரசு கைது செய்து சிறையில் அடைக்கலாம்” என்றார்.
போராட்டக் குழுவில் முக்கியமானவரும் பஞ்சாபின் கிராந்திகாரி கிஸான் யூனியன் தலைவருமான டாக்டர் தர்ஷன் பால், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, “இடதுசாரிகள் உள்ளிட்ட எவரும்எங்கள் போராட்டத்தை கைப்பற்றவில்லை. எனினும் இடதுசாரிகளுக் கும் இந்த நாட்டில் போராட உரிமை உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் வந்த சர்வதேச மனித உரிமை தினத்தை அனுசரிக்கும் போது அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் விடுதலை கோஷங்கள் எழுப்பப்பட் டன” என்றார்.
விவசாயிகள் போராட்டத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக ஹன்னான் மோலா (74) இடம்பெற்றுள்ளார். அகில இந்திய கிஸான் சபா பொதுச் செயலாளரான இவர் தனது 16-வது வயது முதல் இடதுசாரி சிந்தனையாளராக உள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) அரசியல் விவகாரக்குழு உறுப்பினராகவும் உள்ளார். முன்னாள் எம்.பி.யான இவர் மேற்கு வங்கத்தின் உலுபேரியா மக்களவைத் தொகுதியில் 8 முறை வெற்றி பெற்றவர் ஆவார்.