

மத்தியப் பிரதேசத்தில் போலீஸாருடன் தனித்தனியாக நடந்த மோதல்களில் இரு பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிராவின் எல்லையில் உள்ள மத்தியப் பிரதேசத்தின் பாலாகாட் மாவட்ட வனப்பகுதிகளில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்துக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் திவாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''தங்கள் சதித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக மாவோயிஸ்டுகள் பலர் மத்தியப் பிரதேசத்தின் பாலாகாட் மற்றும் மாண்ட்லாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நேற்றிரவு போலீஸாருக்குத் தகவல்கள் கிடைத்தன.
அதன் அடிப்படையில் அப்பகுதிகளுக்கு போலீஸார் விரைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். போலீஸாருடன் தனித்தனியாக நடந்த மோதல்களில் கொல்லப்பட்ட இருவரும் பெண் மாவோயிஸ்டுகள் என அடையாளம் காணப்பட்டனர்.
மாவோயிஸ்டுகளில் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் கொல்லப்பட்டார். மற்றொருவர் சனிக்கிழமை காலை 7 மணியளவில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட இரண்டு மாவோயிஸ்டுகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இருப்பினும், அப்பகுதியில் மாவோயிஸ்டுகளுடன் ஆரம்பத்தில் தொடர்பில் இருந்த சிலர், சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் மகாராஷ்டிராவின் கட்சிரோலியைச் சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் சத்தீஸ்கரில் உள்ள பஸ்தாரைச் சேர்ந்தவர் என்றும் தாங்கள் வைத்திருந்த படங்களின் அடிப்படையில் கூறினர்.
இந்த என்கவுன்ட்டர்கள் கிர்னாபூர் காவல் நிலையத்தின் கீழ் நடந்தது''.
இவ்வாறு அபிஷேக் திவாரி தெரிவித்தார்.