

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்திவரும் நிலையில், தேசியத் தலைநகரில் பல எல்லைச் சாலைகள் பயணிகளுக்குச் செல்ல வழியின்றி மூடப்பட்டிருந்தன.
செப்டம்பர் மாதம் இயற்றப்பட்ட வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லி எல்லைகளில் 16-வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளடைவில் பல்வேறு மாநில விவசாயிகளும் இதில் கலந்துகொண்டனர். டெல்லியின் சிங்கு, திக்ரி, காசிப்பூர் மற்றும் சில்லா (டெல்லி-நொய்டா) எல்லை முனைகளில் போராட்ட விவசாயிகள் முகாமிட்டுள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான பாதுகாப்புப் பின்னணியை அகற்றுவதோடு, வருவாய்க்கு உறுதி செய்யும் நெல் மண்டிகளையும் அகற்றிவிடும் என்று விவசாயிகள் கவலைப்படுகிறார்கள். ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்றும், புதிய சட்டங்கள் விவசாயிகளுக்கு தங்கள் பயிர் விற்க கூடுதல் வாய்ப்புகளை வழங்கும் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்களைத் திருத்தி, குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) முறையைத் தொடர்வது குறித்து எழுத்துபூர்வ உத்தரவாதம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவையும் விவசாய சங்கங்கள் நிராகரித்தன.
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாடு முழுவதும் ரயில் தடங்களையும், டெல்லிக்குச் செல்லும் அனைத்து நெடுஞ்சாலைகளையும் தடுப்பதாக விவசாய சங்கங்கள் நேற்று தெரிவித்தன.
இதனை அடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியின் பல்வேறு சாலைகளையும் மூடுவது குறித்து டெல்லி போலீஸார் ட்விட்டர் வாயிலாகத் தெரிவித்தனர்.
தொடர்ச்சியான ட்வீட்டுகளில், டெல்லி போக்குவரத்து போலீஸார் கூறியதாவது:
''டெல்லியின் திக்ரி மற்றும் தன்சா எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இவ்வழியே தற்போது போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. ஜாதிகாரா எல்லை மட்டும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகளுக்காக திறந்திருக்கும்.
வழக்கமாக இப்பாதைகள் வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்தைத் தவிர்க்க மாற்று வழிகளை மேற்கொள்ளவும்.
ஹரியாணாவுடனான ஜரோடா எல்லையில் போக்குவரத்து இயக்கத்திற்கு ஒரே ஒரு வண்டி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. ஹரியாணா செல்லவிரும்பும் பயணிகள் தாவுரலா, கபாஷேரா, பதுசராய், ராஜோக்ரி என்.எச் 8, பிஜ்வாசன் / பஜ்கேரா, பாலம் விஹார் மற்றும் துண்டஹேரா எல்லைகள் வழியாகச் செல்ல முடியும்.
பயணிகள் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளி போன்ற கோவிட்-19 நெறிமுறைகளைப் பின்பற்றவும் வேண்டும்''.
இவ்வாறு டெல்லி போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர்.