

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 74-வது பிறந்தநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் மற்றும் நோய்த்தொற்று ஏற்படுத்திய துயரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்திருந்தார்.
இதனால் சோனியா காந்தியின் பிறந்தநாளில் கேக் வெட்டுவது உட்பட அனைத்து வகையான கொண்டாட்டங்களையும் தவிர்க்குமாறு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், அனைத்து மாநிலத் தலைவர்களிடமும் கேட்டுக் கொண்டார்.
சோனியா காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டிருந்தாலும் தலைவர்கள் அவருக்கு ட்விட்டர் வழியாக வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடவுள் அவரை நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழ ஆசீர்வதிப்பாராக ”என்று தெரிவித்துள்ளார்.