

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை, சட்டவிரோதமானவை. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால், இலவசமாக வாதிடத் தயார் என்று உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் (எஸ்சிபிஏ) தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள், விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
11-வது நாளாகத் தொடரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப் பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 சுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமுகமான தீர்வும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி 8-ம் தேதி (நாளை) பாரத் பந்த் அதாவது நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்ய விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனதா தளம், டிஆர்எஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தச் சூழலில் விவசாயிகள் போராட்டத்துக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான துஷ்யந்த் தவே அளித்த பேட்டியில் கூறியதாவது:
“மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் சட்டவிரோதமானவை. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை. இந்தச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் அதற்கு இலவசமாக வாதிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நாட்டின் நலன் கருதி, விவசாயிகள் நலன் கருதி, இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை முடியும்வரை, உச்ச நீதிமன்றம் இந்த மனுவை விசாரிக்கும்வரை, மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டு, இந்தச் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்து அறிவிக்கை வெளியிட வேண்டும். அப்படிச் செய்தால்தான் விவசாயிகளின் வாழ்க்கையைக் காக்க முடியும்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே வேளாண் சட்டங்களை எதிர்த்து ஏற்கெனவே ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி மனோஜ் ஜா, திமுக எம்.பி. திருச்சி சிவா, காங்கிரஸ் கட்சியின் சத்தீஸ்கரைச் சேர்ந்த ராகேஷ் வைஷ்ணவ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.