

ஆந்திரப் பிரதேச வனப்பகுதிகளில் பதுங்கியிருந்த 12 மாவோயிஸ்டுகள் போலீஸார் முன் சரணடைந்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
விசாகப்பட்டினம் மாவட்டத்தின் சிந்தப்பள்ளி காவல்நிலையத்தில் உதவி காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) வித்யா சாகர் நாயுடு முன் இன்று காலை அவர்கள் ஒ சரணடைந்துள்ளனர். இவர்கள் 12 பேரும் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கலிகொண்டா பகுதியைச் சேர்ந்த பத்ருதிகுண்டா, பனசலாபந்தா, அகுலூரு, ராமகட்டா ஆகிய கிராமங்களை சொந்த ஊராகக் கொண்டவர்கள்.
மாவோயிஸ்டுகள் சரணடைந்தது குறித்து ஏஎஸ்பி வித்யா சாகர் நாயுடு கூறியதாவது:
வனப்பகுதிகளில் பதுங்கியிருந்த 12 மாவோயிஸ்டுகள் தானாக முன்வந்து சரணடைந்துள்ளனர். சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகள் அனைவரும் மாவோயிஸ்டுகளின் மோசமான செயல்களால் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.
மக்களை காட்டிக்கொடுப்பவர்களாக முத்திரை குத்துவதோடு வெறும் ஊகத்தின் அடிப்படையில் அவர்களைக் கொலை செய்யவும் தயங்காத மாவோயிஸ்டுகளின் செயல்கள் காட்டுமிராண்டித்தனமாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
பொதுவாகவே மாவோயிஸ்டுகளும் மக்களும் தங்கள் பகுதியில் உள்ள நக்சல் செயல்பாட்டின் காரணமாக வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பதை அறிந்துள்ளவர்களாகத்தான் அவர்கள் இருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி சிஆர்பிஎப் இன் மக்கள் நல்வாழ்வு நடவடிக்கை திட்டங்களுடன் காவல்துறை மாவோயிஸ்டு பாதிப்புப் பகுதிகளில் பல்வேறு சமூகப் பணிகளை எவ்வாறு நடத்தி வருகிறது என்பதை அவர்கள் கவனித்து வருகின்றனர்.
கிராமங்கள் மாவோயிஸ்டுகளின் பாரம்பரிய கோட்டைகளாகவும், அவர்களுக்கு அவ்வப்போது கடந்துசெல்லும் முக்கிய பகுதிகளாகவும் இருந்தன. அந்த பகுதிகளிலிருந்து போராளிகள் சரணடைவது நிச்சயமாக சிந்தப்பள்ளி துணைப்பிரிவில் மாவோயிஸ்டு குழுக்களின் வலிமையைக் குறைப்பதற்கான அறிகுறியாகும்.
இவ்வாறு ஏஎஸ்பி நாயுடு தெரிவித்தார்.