

மத்திய அ ரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து வரும் 8-ம் தேதி விவசாயிகள் சங்கங்கள் நடத்தும் பாரத் பந்த்திற்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அனைத்து இந்திய ஃபார்வேர்ட் பிளாக் கட்சி ஆகியவை இணைந்து இந்த ஆதரவை அளித்துள்ளன.
இதுதொடர்பாக இடதுசாரிக் கட்சிகள் இணைந்து கூட்டாக விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து வரும் 8-ம் தேதி நாடுமுழுவிய அளவில் விவசாயிகள் அமைப்புகள், சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு(பாரத் பந்த்)இடதுசாரிகள் முழுமையாக ஆதரவு அளிக்கின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அனைத்து இந்திய ஃபார்வேர்ட் பிளாக் ஆகிய கட்சிகள் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.
நாட்டின் உணவுப் பாதுகாப்பையும், வேளாண்மையையும் காக்க நமக்கு உணவு வழங்கும் விவசாயிகள் நடத்தும் போாராட்டம் குறித்து தவறாகப் பிரச்சாரம் செய்யும் ஆர்எஸ்எஸ், பாஜகவின் பேச்சுகளுக்கு இடதுசாரிகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், மின்சாரச் சட்டத்திருத்தத்தையும் வாபஸ் பெற வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, டிசம்பர் 8-ம் தேதி விவசாயிகள் நடத்தும் பாரத் பந்த்திற்கு அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என இடதுசாரிகள் கேட்டுக்கொள்கின்றன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.