வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் போராடிவரும் விவசாயிகளை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளால் சாலையில் போக்குவரத்துநெரிசல் ஏற்படுகிறது, இது மேலும் கரோனா வைரஸ் பரவலை அதிகரிக்க வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ரிஷாப் சர்மா வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் பாரிகர் மூலம் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகள் போராட்டத்தால் போக்குவரத்து நெரிதல், போக்குவரத்து முடக்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக த புராரியில் உள்ள நிராங்கரி மைதானத்தை போலீஸார் கடந்த மாதம் 27-ம் தேதி போராட்டம் நடத்த ஒதுக்கினர்.

ஆனால், தற்போது விவசாயிகள் டெல்லி சாலைகளில் நடத்திவரும் போராட்டத்தால், எல்லைகள் மூடப்பட்டுள்ளன, போக்குவரத்து முடங்கி, கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்வதில் பல்வேறு சிரமங்களையும், பாதிப்புகளையும் எதிர்கொள்கிறார்கள்.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஷீகான்பாக் பகுதியில் நடத்தும் போராட்டம் குறித்த வழக்கில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், பொது இடங்களை காலவரையின்றி ஆக்கிரமித்து போராட்டம் நடத்த கூடாது. போராட்டம், எதிர்ப்புகளைத் தெரிவிக்க அதற்காக ஒதுக்கப்பட்ட தனி இடத்தில் தெரிவிக்கலாம் என தெரிவித்திருந்தது.

கரோனா வைரஸ் குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடக்காமல் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்றாக சாலைகளில் முகக்கவசம் இன்றி, சமூக விலகலைக் கடைபிடிக்காமல் கூடியுள்ளார்கள். இதனால் கரோனா வைரஸ் பரவலும் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

கரோனாவைரஸ் சமூகப் பரவல் ஏற்படாமல் தடுக்கவும், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும், மருத்துவ உதவிகள், அவசரகால உதவிகள் தடையின்றி கிடைக்கவும் உடனடியாக போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்துவது அவசியம்

ஆதலால், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை உடனடியாக அப்புறப்படுத்தி டெல்லி போலீஸார் ஏற்கெனவே ஒதுக்கிய இடத்தில் போராட்டம் நடத்த உத்தரவிட வேண்டும்
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in