வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும்: விவசாயிகள் அறிவிப்பு: 8 திருத்தங்களை செய்ய மத்திய அரசு சம்மதம்

விவசாயிகள்  மத்திய அரசுக்கும் இடையே நேற்று 4-வது சுற்றுப் பேச்சு நடந்த காட்சி : படம் ஏஎன்ஐ
விவசாயிகள் மத்திய அரசுக்கும் இடையே நேற்று 4-வது சுற்றுப் பேச்சு நடந்த காட்சி : படம் ஏஎன்ஐ
Updated on
2 min read


விவசாயிகளுக்கும், மத்தியஅரசுக்கும் இடையே நேற்று நடந்த 4-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்தனர். ஆனால் வேளாண் சட்டங்களில் 8 திருத்தங்களை செய்ய முன்வந்த மத்தியஅரசின் நிலைப்பாட்டை விவசாயிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் கடந்த இரு மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டெல்லி சலோ எனும் டெல்லி நோக்கிய போராட்டம் 8-வது நாளாக டெல்லியின் புறநகரில் நீடித்து வருகிறது.

கடும் குளிர், கரோனா பரவல் எதையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. விவசாயிகள் சங்கத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே 4-வது சுற்றுப் பேச்சுவார்த்தை டெல்லியில் விஞ்ஞான் பவனில் நேற்று 7 மணிநேரம் நடந்தும் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

வேளாண் சட்டங்களில் 8 திருத்தங்களை மேற்கொள்ள மத்தியஅரசு முன்வந்தது. குறைந்தபட்ச ஆதரவு விலையில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படாது என்று மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கவும் முன்வந்தது. ஆனால், இதை ஏற்க மறுத்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, மத்திய அரசு விவசாயிகளுக்கு தேநீர், உணவு வழங்கியபோதிலும், அதை ஏற்க மறுத்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த தேநீர், உணவையே சாப்பிட்டனர்.

பேச்சு வார்த்தை முடிந்தபின் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நிருபர்களிடம் கூறுகையில் “ விவசாயிகளின் நிலத்துக்கு கார்ப்பரேட்டகளிடம் இருந்து எந்த அச்சுறுத்தலும் இல்லை. தேவைப்பட்டால் இதை சரி செய்யவும் அரசு தயாராக இருக்கிறது. சனி்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு 5-வது கட்ட பேச்சு நடக்கிறது அதில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்.

கடும் பனியை மனதில் வைத்து போராட்டத்தை விவசாயிகள் முடித்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதில் நீ பெரியவனா நான் பெரியவானா என்ற ஈகோ இல்லை. அனைத்து அம்சங்களையும் ஆலோசித்து, பரிசீலிக்க திறந்த மனதுடன் அரசு தயாராக இருக்கிறது.

3 வேளாண் சட்டங்களில் சில முக்கியமான கவலைக்குரிய அம்சங்களை விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக ஏபிஎம்சி, வரி முறை, பிரச்சினை ஏதும் ஏற்பட்டால் உயர்நீதிமன்றத்தை அணுகும் முறை போன்றவை வலுப்படுத்தப்படும்.

3 சட்டங்களிலும் திருத்தம் செய்ய அரசு தயாராக இருக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையை வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் அரசு தயாராக இருக்கிறது. விவசாயிகள் நலனில் தொடரந்து மத்திய அரசு அக்கறையுடன் இருந்து வருகிறது ” எனத் தெரிவித்தார்.

விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில் “ வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்வதாக மத்தியஅரசு கேட்டுக்கொண்டது. ஆனால், அந்த கோரிக்கையை நாங்கள் நிராகரித்துவிட்டோம். விவசாயிகள் இருவாய்ப்புகளை மட்டுமே அரசுக்கு வழங்கியுள்ளோம்.

ஒன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள், 2-வது போராட்டம் செய்யும் விவசாயிகளை உங்கள் படைக் கொண்டு அகற்றுங்கள்.” எனத் தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in