

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக வேறு எதை ஏற்றுக்கொண்டாலும் அது தேசதுக்கான துரோகம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்துத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் கடந்த இரு மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டெல்லி சலோ எனும் டெல்லி நோக்கிய போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லையை முற்றுகையிட்டு 8 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிர், கரோனா பரவல் எதையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விவசாயிகளுடன் 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்பு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், சூழல் கருதி செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் விவசாயிகள் சங்கத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதையடுத்து, 2-வது கட்டப் பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது. இதற்கிடையே சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டி வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், விவசாயிகள் பிரச்சினையை சுமுக முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் இன்று காலை ஆலோசனை நடத்தினார். இதன் விவரம் ஏதும் வெளிவரவில்லை.
இந்தச் சூழலில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “புதிய வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதற்கு மாற்றாக, அதற்குக் குறைந்து எதை ஏற்றுக்கொண்டாலும், அது விவசாயிகளுக்கும், தேசத்துக்கும் இழைக்கும் துரோகம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது:
''ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி சாலையில் ஒரு வாரத்துக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள். தேசத்துக்கு உணவு வழங்கும் விவசாயிகளுக்கு மதிப்பையும், கவுரவத்தையும் வழங்கிட வேண்டும்.
திறந்த வெளியில் சாலையில், குளிர்ந்த பனியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
விவசாயிகள் பிரச்சினையை மிக விரைந்து மத்திய அரசு தீர்க்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான கொள்கையை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வற்புறுத்தாதீர்கள்.
விவசாயிகளின் வேதனை ஏற்கெனவே உலக அளவில் கவனத்தை ஈர்த்துவிட்டது. தேசத்தின் தோற்றம் சேதமடைந்து, மக்களை வெட்கப்பட வைத்துள்ளது. விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையிலான 4-வது சுற்றுப் பேச்சு, இந்திய விவசாயிகளின் முக்கியக் கவலைகளைத் தீர்த்து சுமுகமான முடிவை எட்டும் என நம்புகிறேன்”.
இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.