

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிளுக்கு ஆதரவாக அனைத்து இந்திய மோட்டார் வாகனப் போக்குவரத்துக் கூட்டமைப்பும் (ஏஐஎம்டிசி) களத்தில் இறங்க முடிவு செய்துள்ளது.
விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக வரும் 8-ம் தேதி வட இந்தியா முழுவதும் லாரிகளை இயக்காமல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஏஐஎம்டிசி அறிவித்துள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் கடந்த இரு மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டெல்லி சலோ எனும் டெல்லி நோக்கிய போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லையை முற்றுகையிட்டு 8 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிர், கரோனா பரவல் எதையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விவசாயிகளுடன் 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்பு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், சூழல் கருதி செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் விவசாயிகள் சங்கத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதையடுத்து, 2-வது கட்டப் பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது. இதற்கிடையே சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டி வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இதற்கிடையே விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து இந்திய லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு வரும் 8-ம் தேதி வட இந்தியா முழுவதும் லாரிகளை இயக்காமல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
அனைத்து இந்திய மோட்டார் வாகனப் போக்குவரத்துக் கூட்டமைப்பின்(ஏஐஎம்டிசி) தலைவர் குல்தரன் சிங் அத்வால் கூறுகையில், “விவசாயிகள் போராட்டம் நடத்தத் தொடங்கிய முதல் நாளில் இருந்து எங்கள் ஆதரவைத் தெரிவித்துவிட்டோம்.
விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு தீர்க்காவிட்டால், வட இந்தியா முழுவதும் வரும் 8-ம் தேதி முதல் லாரிகளை இயக்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளோம். தேசத்துக்கு அன்னதானம் செய்யும் விவசாயிகளுக்கு முழு ஆதரவையும் தெரிவிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
ஏஐஎம்டிசி குழுவின் தலைவர் பல் மல்கித் சிங் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “டெல்லி, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட இந்தியா முழுவதும் வரும் 8-ம் தேதி முதல் நாங்கள் லாரிகளை இயக்கப் போவதில்லை.
விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு தீர்க்காவிட்டால், இந்தப் போராட்டம் நாடு முழுவதும் விரிவடையும். விவசாயிகள் தங்களின் சட்டபூர்வ உரிமைக்காகப் போராடுகிறார்கள். 70 சதவீத மக்கள் விவசாயத்தைச் சார்ந்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து ஏஐஎம்டிசி வெளியிட்ட அறிக்கையில், “விவசாயிகளின் போராட்டத்துக்கு முழுவமையாக ஏஐஎம்டிசி ஆதரவு தருகிறது. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு தீர்க்காவிட்டால் வரும் 8-ம் தேதி வட இந்தியா முழுவதும் லாரிகள் இயக்கப்படாது.
தற்போது ஆப்பிள்கள் வரத்து அதிரித்துள்ளது, லாரிகள் இயக்கப்படாவிட்டால் வீணாகிவிடும். உருளைக்கிழங்கு, வெங்காயம், காய்கறிகள், பழங்கள், அத்தியாவசியப் பொருட்களான மருந்துகள், பால் ஆகிய பொருட்களுக்கு டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பற்றாக்குறை ஏற்படும்.
மத்திய அரசு விவசாயிகளை மாண்புடன் நடத்தி, அவர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும். மத்திய அரசுடன் அமைதியான, சுமுகமான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வை எட்டத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் விவசாயிகளுக்கு நாங்கள் அளிக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.