2ஜி அலைக்கற்றை வழக்கில் விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ மனு; 2021 ஜனவரி 13-ம் தேதி முதல் விசாரணை: டெல்லி உயர் நீதிமன்றம் அறிவிப்பு
2ஜி அலைக்கற்றை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் எதிராக சிபிஐ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை 2021-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி முதல் தொடங்கும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
2ஜி அலைக்கற்றை வழக்கில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 17 பேரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி விடுவித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி அமலாக்கப் பிரிவும், 20-ம் தேதி சிபிஐ அமைப்பும் மேல்முறையீடு செய்தன.
இந்த வழக்கின் விசாரணையைக் கவனித்து வந்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரிஜேஸ் சேத்தி நவம்பர் மாதத்தோடு ஓய்வு பெற்றுவிட்டார்.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பு தனது வாதத்தைக் கடந்த ஜனவரி 15-ம் தேதி முடித்துக்கொண்டது. ஆனால், அதன்பின் கரோனா வைரஸ் பரவல் காரணமாக வழக்கின் விசாரணை நடக்கவில்லை.
இந்நிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பிரிஜேஸ் சேத்தி நவம்பர் மாதத்தோடு ஓய்வு பெற்றுவிட்டதால், இந்த வழக்கு வழக்கு நீதிபதி கண்ணாவுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் 2ஜி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
சிபிஐ மேல்முறையீடு செய்ததற்கு எதிராக 2ஜி வழக்கில் விடுவிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களையும் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
அதுமட்டுமல்லாமல், 2ஜி வழக்கில் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக சிறப்பு அனுமதி மனுவை சிபிஐ தாக்கல் செய்திருந்தது. இந்த மனு கடந்த அக்டோபர் மாதம் நாள்தோறும் நீதிபதி பிரிஜேஸ் சேத்தி முன் விசாரிக்கப்பட்டாலும், உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. அவரும் நவம்பர் 30-ம் தேதியோடு ஓய்வு பெற்றுவிட்டார்.
இந்நிலையில், சிபிஐ தாக்கல் செய்த சிறப்பு அனுமதி மனுவை 2021-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை விசாரிப்பதாக நீதிபதி கண்ணா இன்று அறிவித்தார்.
சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சோனியா மாத்தூர், டிசம்பர் மாதத்திலேயே விசாரித்து முடிவு அறிவிக்கக் கோரினார். ஆனால், அதற்கு நீதிபதி கண்ணா மறுத்து ஜனவரியில் விசாரிக்கப்படும் என அறிவித்தார்.
