

விவசாயிகளுக்கு நாம் கடன்பட்டுள்ளோம். உரிய நீதி வழங்குவதன் மூலமாக மட்டுமே அதை அடைக்க முடியும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லியின் சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லைகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டம் எதிர்க்கட்சிகளின் தந்திரம் என்றும், வேளாண் சட்டங்களில் விவசாயிகளுக்கு நிறைய நன்மைகள் உள்ளன என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்நிலையில் மத்திய அரசு, போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் சங்கங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கு மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் தனது ட்விட்டரில் இன்று கூறியதாவது:
"உணவு உற்பத்தியாளர்கள் போராட்டக் களங்களிலும் சாலைகளிலும் அமர்ந்து போராடி வருகிறார்கள். தொலைக்காட்சிகளிலும் பேசி வருகிறார்கள். விவசாயிகளின் கடின உழைப்புக்கு நாம் அனைவரும் கடன்பட்டிருக்கிறோம்.
அவர்களுக்கு நீதி வழங்குவதன் மூலம் மட்டுமே இந்தக் கடன் திருப்பிச் செலுத்தப்படும்.
இந்தக் கடன் அவர்களுக்கு நீதி மற்றும் அவர்களின் உரிமைகளை வழங்குவதன் மூலம் மட்டுமே நிறைவடையும். அவர்களை மோசமாக நடத்துவதன் மூலமோ அல்லது தடியடிப் பிரயோகத்தின் மூலமோ அல்லது அவர்களுக்கு எதிராக கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதன் மூலமோ நிறைவடையாது.
விழித்துக் கொள்ளுங்கள், ஆணவத்தின் நாற்காலியில் இருந்து இறங்கி வாருங்கள். விவசாயிகளுக்கு அவர்களுக்கான உரிமைகளை வழங்குவது குறித்து சிந்தியுங்கள்''.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.