

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளுடனான சண்டையின்போது உயிர்த்தியாகம் செய்த கோப்ரா அதிரடிப் படையின் துணைத் தளபதி நிதின் பலேராவுக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் குறித்துக் கிடைத்த தகவலை அடுத்து சிஆர்பிஎஃப் அதிரடிப் படையினர் தேடுதல் வேட்டையில் களமிறங்கினர்.
கோப்ரா 206 பட்டாலியனைச் சேர்ந்த சிந்தல்நார் / புர்கபால் / சிந்தகுபா முகாம்களில் இருந்து கோப்ரா / எஸ்.டி.எஃப் / டி.ஆர்.ஜி படையினர் விரைந்து மாவோயிஸ்ட்டுகள் மீதான தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது மாவோயிஸ்ட்டுகள், சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.
இரவு 8:30 மணியளவில், சுக்மா மாவட்டத்தின் சிந்தகுஃபா காவல் நிலையத்திற்குட்பட்ட அரபுராஜ் மெட்டா மலைகள் அருகே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
குண்டுவெடிப்பில் மொத்தம் 10 பேர் காயமடைந்ததாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) தெரிவித்துள்ளது. இதில் 8 பேர் மேலதிக சிகிச்சைக்காக நள்ளிரவில் ராய்ப்பூருக்கு ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டனர். இருவர் சிந்தால்நார் சிஆர்பிஎஃப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படுகாயமடைந்த நிலையில் ராய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட துணைத் தளபதி நிதின் பலேராவ் இன்று அதிகாலை 3:30 மணியளவில் உயிரிழந்தார். அவர் மகாராஷ்டிராவின் நாசிக் நகரைச் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி
மாவோயிஸ்ட்டுகளுடனான சண்டையில் உயிர்த்தியாகம் செய்த சிஆர்பிஎஃப் கோப்ரா 206 பட்டாலியனின் துணைத் தளபதி நிதின் பலேராவுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை ராய்ப்பூரில் நடைபெற்றது.
இதில் சிஆர்பிஎஃப் அதிரடிப் படையினரின் அனைத்துப் பிரிவினரும் கலந்துகொண்டு மறைந்த துணைத் தளபதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து சிஆர்பிஎஃப் தலைவர் டாக்டர் ஏ.பி.மகேஸ்வரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
''வீரம்மிக்க துணைத் தளபதியின் குடும்பத்தினருடன் அதிரடிப் படையினர் ஆதரவாக என்றும் துணைநிற்போம் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.
எதிரிகளின் இதுபோன்ற மோசமான செயல்களால் சிஆர்பிஎஃப் பணிகள் தடைப்பட்டுவிடாது. மேலும் சத்தீஸ்கர் காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்போடு மேலும் வீரியத்தோடு எங்கள் பணி தொடரும்''.
இவ்வாறு சிஆர்பிஎஃப் தலைவர் தெரிவித்துள்ளார்.