

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போதெல்லாம் அமலாகாத கரோனா கட்டுப்பாட்டு விதிகள், இன்று டெல்லியை நோக்கி விவசாயிகள் நடத்தும் பேரணியில் மட்டும் பாய்வதேன் என யோகேந்திர யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவரான கோகேந்திர யாதவ், விவசாயிகள் பேரணிக்கு ஆதரவாக ஹரியாணாவில் களம் கண்டார். அப்போது அவரை குருகிராம் பகுதியில் விஅத்து போலீஸார் தடுத்து நிறுத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புக் காவலில் எடுத்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய யோகேந்திர யாதவ், டெல்லி சலோ பேரணியைத் தடுப்பதற்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தான் காரணம் என்றால். அதே நடவடிக்கை ஏன் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஏன் பின்பற்றப்படவில்லை. மூன்று நாட்களுக்கு முன்னதாக ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா நடத்திய பேரணியின் போது ஏன் பின்பற்றப்படவில்லை. அப்போது, ஆயிரக்கணக்கான விவசாயிகள் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியைத் துறந்து திரண்டனர். அப்போதெல்லாம் தொற்று பரவவில்லை. இன்று டெல்லி சலோ பேரணியில் விவசாயிகள் திரண்டால் மட்டும் தொற்று பரவிவிடுமா? இது புதுவிதமான தொற்றாக இருக்கிறதே? ஏன் இது புதுவகை நோய் என்றுகூட சொல்லலாம்.
பாஜக அரசு இன்று விவசாயிகளுக்கு எதிராக கடைபிடிக்கும் உத்திகள் எல்லாம், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தேசியவாதிகளுக்கு எதிராக ஏவப்பட்டவைக்கு நிகரானது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து ஹரியாணா தொடங்கி நாடு முழுவதுமே விவசாயிகள் திரள்வதால் அரசுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதனாலேயே இவ்வாறு நடந்து கொள்கிறது" என்றார்.
முன்னதாக, டெல்லி சலோ போராட்டத்திற்காக ஹரியாணாவில் இருந்து பேரணியாக புறப்பட்ட விவசாயிகள் அம்பாலா அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதோடு, தண்ணீரையும் பீய்ச்சி அடித்து கலைத்தனர்.
இதற்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.