நாளை டெல்லி சலோ போராட்டம்; இன்றே திரண்டுவந்த விவசாயிகள்: ஹரியாணாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஹரியாணா போலீஸ் | படம்: ஏஎன்ஐ
ஹரியாணா போலீஸ் | படம்: ஏஎன்ஐ
Updated on
1 min read

ஹரியாணாவில் நாளை டெல்லி சலோ போராட்டம் நடைபெற உள்ளது. இதனால் கிராமங்களிலிருந்து இன்றே புறப்பட்டுச் சாலைகளில் விவசாயிகள் திரண்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் இயற்றிய புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மூன்று வேளாண் சட்டங்களுக்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து நாளை (நவம்பர் 26) தேசிய தலைநகரை இணைக்கும் ஐந்து நெடுஞ்சாலைகள் வழியாக 'டெல்லி சலோ' பேரணிக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இப்போராட்டம் நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

சண்டிகர்-டெல்லி நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்காக ஹரியாணா, பஞ்சாப் மாநில விவசாயிகள் தேசிய தலைநகருக்குச் செல்ல தங்கள் கிராமங்களிலிருந்து இன்றே வந்துகொண்டிருப்பதால் சாலைகள் எங்கும் பாதுகாப்புப் பணியாளர்கள் ஏராளமானோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் விவசாயிகளின் போராட்ட அழைப்புக்கு முன்னதாக சட்டம் ஒழுங்கை உறுதி செய்வதற்காக முதல்வர் மனோகர் லால் கட்டாரின் அறிவுறுத்தலின்படி சில நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தடுக்கப்பட்டுள்ளது என்று ஹரியாணா போலீஸார் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை நடத்த விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், விவசாயிகளைக் கலைக்கவும் போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in