

டெல்லியில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதம் ரூ.500லிருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அறிவித்தார்.
டெல்லியில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. துர்கா பூஜை, தீபாவளிப் பண்டிகை, சாத் பூஜை ஆகியவற்றில் மக்கள் சமூக விலகலைப் பின்பற்றாமல் இருந்ததும், காற்று மாசும் சேர்ந்து கரோனா பரவலை அதிகப்படுத்தியது என்று மருத்துவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
தற்போது டெல்லியில் மட்டும் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 5 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 131 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
''டெல்லியில் முகக்கவசம் அணியாமல் செல்லும் மக்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. அந்த அபராதத் தொகை தற்போது ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. அடுத்துவரக்கூடிய சாத் பூஜையை குளங்கள், நீர்நிலைகளில் மக்கள் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
டெல்லி அரசு இன்று எடுத்த முடிவின்படி, தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஐசியு அல்லாத படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கும் அளவை 50 முதல் 60 சதவீதமாக உயர்த்தியுள்ளோம். அதேபோல தனியார் மருத்துவமனைகளில் ஐசியுவுடன் கூடிய படுக்கைகளை 80 சதவீதம் கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்.
இதுவரை 1,400 ஐசியு படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் டெல்லி அரசு மருத்துவமனைகளில் 663 படுக்கைகள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துமனைகளில் 750 ஐசியு படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுதவிர 7,500 சாதாரண படுக்கைகள் உள்ளன. தற்போது 446 ஐசியு படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன.
அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளைத் தனியார் மருத்துவமனைகள் சிறிது காலத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கரோனாவைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் எந்தவிதமான அரசியலும் இல்லை. மக்கள் தயவுசெய்து நீர்நிலைகளில் சென்று சாத்பூஜையின் போது நீராட வேண்டாம்.நோய்த்தொற்று மேலும் அதிகரிக்கும்''.
இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்