

டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் வரை அதைத் தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு டெல்லி அரசு என்ன விளக்கம் அளிக்கப்போகிறது? என்று டெல்லி உயர் நீதிமன்றம் காட்டமாகக் கேள்வி எழுப்பியது.
டெல்லியில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. துர்கா பூஜை, தீபாவளிப் பண்டிகை, சாத் பூஜை ஆகியவற்றில் மக்கள் சமூக விலகலைப் பின்பற்றாமல் இருந்ததும், காற்று மாசும் சேர்ந்து கரோனா பரவலை அதிகப்படுத்தியது என்று மருத்துவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
தற்போது டெல்லியில் மட்டும் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 5 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 131 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சூழலில் வழக்கறிஞர் ராகேஷ் மல்ஹோத்ரா என்பவர் டெல்லியில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அதில், டெல்லியில் கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். அப்போதுதான் கரோனா நோயாளிகளைக் குறைக்க முடியும். கரோனா வைரஸ் பரவலைக் குறைக்க, தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த உத்தரவிடவேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இருவரும் டெல்லி ஆம் ஆத்மி அரசைக் கடுமையாகச் சாடினர்.
''டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் இந்த அளவுக்குப் பெரிதாகும் வகையில் தடுக்காமல் டெல்லி அரசு என்ன செய்து கொண்டிருந்தது? நவம்பர் 1-ம் தேதியே கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால், நீங்கள் எந்தவிதமான உதவியும் செய்ய இயலாதவர்களாகிவிட்டீர்கள்.
இப்போது நாங்கள் சில கேள்விகளை எழுப்புகிறோம். டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும்போது, எச்சரிக்கை மணி சத்தமாக ஒலி எழுப்பி இருக்க வேண்டுமா? டெல்லியில் சூழல் மோசமாகும்போதே ஏன் மாநில அரசு விழித்துக்கொள்ளவில்லை?
நவம்பர் 11-ம் தேதிதான் உங்களைத் தூக்கத்திலிருந்து எழுப்ப வேண்டியது இருந்ததா? நவம்பர் 1-ம் தேதி முதல் 11-ம் தேதிவரை டெல்லி அரசு என்ன செய்தது? கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பது குறித்து முடிவு செய்ய ஏன் 18 நாட்கள் தாமதமானது?
இந்த 18 நாட்களில் எத்தனை உயிர்களை இழந்திருக்கிறோம் எனத் தெரியுமா? தங்களின் அன்புக்குரியவர்களை, உறவினர்களை, பெற்றோரை இழந்து தவிப்பவர்களுக்கு உங்களால் விளக்கம் கொடுக்க முடியுமா?
சமூக விலகல் விதிகள், பொது இடங்களில் எச்சில் துப்புதலைத் தடுத்தல், முகக்கவசம் அணிதலைக் கட்டாயமாக்குதல் போன்றவற்றைக் கண்காணிக்க டெல்லி அரசு எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விதிமுறைகளை முதல் முறையாக மீறும்போது ரூ.500 அபராதமும், 2-வது முறையாகச் செய்தால் ரூ.1000 அபராதமும் ஏன் விதிக்கவில்லை. அபராதம் விதித்தலைக் கண்காணித்தல் போன்றவையும் முறையாக இல்லை.
டெல்லியில் சூழல் மோசமாகும்போது கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையைக் கண்காணிக்க, பூதக்கண்ணாடி கொண்டு சூழலை ஏன் கண்காணிக்கவில்லை. என்னவிதமான நடவடிக்கை எடுத்தீர்கள்? நியூயார்க், சாபோலா நகரைப் போல் டெல்லி மாறிவிட்டது.
திருமணம், விஷேசம் , விழாக்களில் 200 பேர் கூடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அதை 50 பேராக நேற்றுதான் குறைத்தீர்கள். இத்தனை நாள் முடிவு எடுக்காமல் என்ன செய்தீர்கள்?''
இவ்வாறு நீதிபதிகள் காட்டமாகக் கேள்வி எழுப்பினர்.