ஆர்டிஐ வரம்புக்குள் காஷ்மீர் மாநிலம்: மத்திய அமைச்சரிடம் தலைமை தகவல் ஆணையர் விளக்கம்

ஆர்டிஐ வரம்புக்குள் காஷ்மீர் மாநிலம்: மத்திய அமைச்சரிடம் தலைமை தகவல் ஆணையர் விளக்கம்
Updated on
1 min read

புதிதாக நியமனம் செய்யப்பட்ட தலைமை தகவல் ஆணையர் யஷ்வர்தன் குமார் சின்ஹா, பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை இன்று சந்தித்து பேசினார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கு தீர்வு காண்பதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து அவர் விளக்கினார்.

இங்கிலாந்துக்கான இந்திய தூதராக இருந்து ஓய்வு பெற்ற யஷ்வர்தன் குமார் சின்ஹா, தலைமை தகவல் ஆணையராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

இந்த சந்திப்பின்போது, ஆர்டிஐ மனுக்களுக்கு தீர்வு காண்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மத்திய அமைச்சரிடம் தலைமை தகவல் ஆணையர் விளக்கினார்.

கரோனா தொற்று நேரத்திலும், கடந்த ஜூன் மாதம் தீர்வு காணப்பட்ட மனுக்களின் வீதம், கடந்தாண்டு ஜூன் மாத அளவை விட அதிகம் என அவர் குறிப்பிட்டார். ஆன்லைன், மெய்நிகர் மற்றும் காணொலி காட்சி போன்ற நவீன தொழில்நுட்பங்களை மத்திய தகவல் ஆணையம் பயன்படுத்துவதால், இது சாத்தியமானது என அவர் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், இந்தாண்டு தொடக்கத்தில் மத்திய தகவல் ஆணையத்தின் வரம்புக்குள் கொண்டுவரப்பட்டது முதல், ஆர்டிஐ மனுக்களுக்கு தீர்வு காணும் நிலவரம் குறித்தும் சின்ஹா விளக்கினார். மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பதற்காக, மத்திய அமைச்சருக்கு சின்ஹா நன்றி கூறினார்.

மத்திய தகவல் ஆணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகளையும் ஜிதேந்திர சிங் எடுத்து கூறினார்.

பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில்தான், ஆர்டிஐ மனுக்களை 24 மணி நேரம் ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டதையும், மத்திய தகவல் ஆணையம் சொந்தமாக தனி அலுவலகத்துக்கு மாற்றப்பட்டதையும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.

வெளிப்படைத்தன்மை, அரசு நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பு என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குடன், மத்திய தகவல் ஆணையம் செயல்பட வேண்டியது முக்கியம் என்பதையும் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in