

நேபாள எல்லைவரை அந்நாட்டுக்கான அத்தியாவசியப் பொருட்கள் போக்குவரத்து தடையின்றி நடைபெற்று வருவதாகவும், அதனைத் தாண்டி பொருட்களை எடுத்துச் செல்வது நேபாளத்தின் பொறுப்பு என்று வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.
ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்று வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து துறையின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் அங்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, "நேபாள விவகாரத்தில் நமது நிலைப்பாடு மிகவும் தெளிவானது. நேபாள மக்களும் அரசியல் கட்சிகளும் சூழலை புரிந்துகொண்டு தகுந்த முடிவை எடுக்க முன்வர வேண்டும்.
இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு செல்லும் சரக்குப் போக்குவரத்து நிறுத்தப்படவில்லை. நேபாள எல்லை வரை அனைத்து லாரிகளும் செல்கின்றன. அதற்கு மேற்பட்ட பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லையைத் தாண்டி தங்களுக்கான பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டியது நேபாள அரசின் பொறுப்பு" என்றார்.
மேலும் இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் மகேந்திர பாண்டேவை தொடர்புகொண்டு பேசியிருப்பதாகவும் ஸ்வரூப் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் போக்குவரத்தை இந்திய அரசு அதிகாரப்பூர்வமற்ற வகையில் நிறுத்தி இருப்பதாக நேபாளம் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதனை கண்டிப்பதாக கூறி, அந்நாட்டில் இந்திய ஊடகங்களை கேபிள் ஆப்பிரேட்டர்கள் முடக்கியுள்ளனர். மொத்தம் 42 செய்தி மற்றும் பொழுதுபோக்கு சேனல்கள் அங்கு முடக்கப்பட்டுள்ளன.