

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த சிஜேபியின் போராட்டத்துக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற வளாகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மூத்த வழக்கறிஞர்கள் 60 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சிஜேபி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்தக் கைது நடந்தது. வழக்கறிஞர்கள் தங்கள் அறைகளிலிருந்தே கைது செய்யப்பட்டதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரதீப் ராய் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
இது மிகுந்த கவலை அளிக்கிறது என்று கூறிய அவர், விவகாரம் தலைமை நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும், வழக்கறிஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 10 நிமிடங்களுக்குப் பிறகு, டெல்லி காவல் துணை ஆணையரிடம் பேசியதாகவும், வழக்கறிஞர்கள் உடனே விடுவிக்கப்படுவார்கள் என்று அவர் உறுதி அளித்ததாகவும் ராய் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கறிஞர்களை விடுவிக்குமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.