ஏக்நாத் ஷிண்டே கட்சியில் உத்தவ் சிவசேனாவின் 6 எம்பிக்கள் ஐக்கியம்

ஏக்நாத் ஷிண்டே கட்சியில் உத்தவ் சிவசேனாவின் 6 எம்பிக்கள் ஐக்கியம்
Updated on
1 min read

மும்பை: உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) கட்சியைச் சேர்ந்த 6 எம்பிக்கள் இன்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தனர்.

மும்பையில் நடைபெற்ற விழாவில் நாகேஷ் ஆஸ்திகர், சஞ்சய் தேஷ்முக், சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தினா பாட்டீல், ஓம் பிரகாஷ் ராஜேநிம்பல்கர், பாவ்சாகேப் வக் சவ்ரே ஆகிய 6 எம்பிக்களும், சிவசேனா தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தங்களை சிவசேனாவில் இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து ஏக்நாத் ஷிண்டே வரவேற்றார்.

பின்னர் பேசிய ஏக்நாத் ஷிண்டே, “பாலாசாகேப் தாக்கரே, ஆனந்த் திகே ஆகியோரின் உண்மையான சிவசேனாவில் இணைந்துள்ள ஆறு எம்பிக்களையும் நாங்கள் வரவேற்கிறோம். 2022-ல் 40 எம்எல்ஏக்கள் எங்களுடன் இணைந்தபோது ஒரு புரட்சி நடந்தது. அந்த புரட்சியின் இரண்டாம் கட்டம் தற்போது நடந்துள்ளது. இம்முறை நாங்கள் சிக்ஸர் அடித்துள்ளோம்.

பாலாசாகேப் தாக்கரேவின் சிவசேனாவை கைப்பற்றவே அன்று நாங்கள் புரட்சி செய்தோம். சிவசேனா மற்றும் தாக்கரேவின் கொள்கைகளைக் காக்கவே நாங்கள் இங்குள்ளோம். அதனால்தான், இந்த ஆறு எம்பிக்களும் பாலாசாகேப்பின் உண்மையான சிவசேனாவில் இணைய முடிவு செய்துள்ளனர். இன்று எங்களுடன் 3 சஞ்சய்கள் இணைந்துள்ளனர். ஏற்கெனவே எங்களுடன் சஞ்சய் ரத்தோட் உள்ளார். இத்தனை சஞ்சய்கள் இங்கு இருக்கும்போது வேறொரு சஞ்சய் (சஞ்சய் ராவத்) குறித்து நாம் பேச வேண்டிய அவசியமில்லை. நான் யாரைப் பற்றி பேசுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.

நான் முதல்வராக இருந்தபோது ஒரு சாதாரணத் தொண்டரைப் போலவே நடந்து கொண்டேன். இன்றும் ஒரு தொண்டராகவே பணியாற்றுகிறேன். இந்த ஆறு எம்பிக்களிடமும் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நீங்களும் சாதாரணத் தொண்டர்களைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். உங்களுக்கும் உங்கள் ஆதரவாளர்களுக்கும் நாங்கள் உரிய மரியாதை அளிப்போம். எங்கள் அமைச்சர்கள் உங்களுடன் அமர்ந்து உங்கள் தொகுதிகளின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்கள். நான் எதையும் பாதியில் விட்டுவிடுவதில்லை. ஆபரேஷன் டைகர் வெற்றிகரமாக முடிந்துள்ளது” என தெரிவித்தார்.

ஏக்நாத் ஷிண்டே கட்சியில் உத்தவ் சிவசேனாவின் 6 எம்பிக்கள் ஐக்கியம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றத்தில் அரசு உறுதியளிக்க வேண்டும்: இந்து முன்னணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in