

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ரூ.19,142 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள நாசிக்-சோலப்பூர்-அக்கல்கோட் 6 வழித்தட கட்டுமான திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாசிக்-சோலப்பூர்-அக்கல்கோட் இடையில் 374 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட உள்ள இந்த பசுமைவழி அணுகல் திட்டம் பிஓடி (சுங்கச்சாவடி) முறையில் கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தத் 6 வழித்தட திட்டம் நாசிக், அகில்யநகர், சோலாப்பூர் போன்ற முக்கிய பிராந்திய நகரங்களை கர்னூலுடன் இணைத்து போக்குவரத்து வசதியை வழங்கும்.
ஒருங்கிணைந்த போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக அமையும். முன்மொழியப்பட்ட இந்த 6 வழித்தட திட்டம் மேற்கு கடற்கரையிலிருந்து கிழக்கு கடற்கரை வரை நேரடி இணைப்பை வழங்கும். இது பயண நேரத்தை 17 மணிநேரம் குறைக்கும், பயண தூரத்தை 201 கி.மீ குறைக்கும்.
சென்னை துறைமுக முனையத்திலிருந்து, திருவள்ளூர், ரேணிகுண்டா, கடப்பா மற்றும் கர்னூல் வழியாக ஹசாப்பூர் (மகாராஷ்டிரா எல்லை) வரை 4-வழிச் சாலைகள் (700 கி.மீ நீளம்) ஏற்கெனவே கட்டுமானத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.