

பிரதிநித்துவப்படம்
தஞ்சாவூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த மூதாட்டியின் சொத்துகளை, போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த, தஞ்சாவூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி உட்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் ஷேக் சிராஜுதீன். இவரது மனைவி முகமதா பேகம் (76). தொழிலதிபரான ஷேக் சிராஜுதீனுக்கு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை, சிராஜ்பூர் நகர், செங்கிப்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான சொத்துகள் உள்ளன. 2015-ல் ஷேக் சிராஜுதீன் உயிரிழந்த நிலையில், அவரது சொத்துகளை தஞ்சாவூரைச் சேர்ந்த வித்யா சுமதி கவனித்து வந்துள்ளார்.
ஜெயலலிதா பேரவை தலைவர்: பின்னர், வித்யா சுமதி தனக்கு அறிமுகமான, தஞ்சாவூரைச் சேர்ந்த அதிமுக ஜெயலலிதா பேரவை மத்திய மாவட்டத் தலைவரான கேபிள் செந்தில் என்கிற செந்தில்குமார் உள்ளிட்டோருடன் சேர்ந்து 2017 முதல் 2022 வரை போலி ஆவணங்களை தயாரித்து, முகமதா பேகத்திடம் கையெழுத்து பெற்றுள்ளனர்.
போலி ஆவணங்கள்… தொடர்ந்து, செங்கிப்பட்டி, சிராஜ்பூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் இடத்தை செந்தில்குமார் தனது உறவினரான ரேவதி, மணிகண்டன், ஆதித்யா, கவிதா, சுஜாதா ஆகியோருக்கு விற்பனை செய்துள்ளார்.
மேலும், சென்னை ஆழ்வார்பேட்டை, தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளில் சிராஜுதீனுக்கு சொந்தமான இடத்தை தானமாக வழங்கிவிட்டதாக போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளனர். மூன்று வங்கிகளில் முகமதா பேகம் பெயரில் கணக்குத் தொடங்கி பரிவர்த்தனை செய்துள்ளனர்.
அண்மையில் சிராஜுதீன் வீட்டை உடைத்து, அங்கிருந்த ஆவணங்கள், 4 இருசக்கர மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்கள், தங்க நகைகள் ஆகியவற்றை திருடியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து செந்தில்குமார் உள்ளிட்டோரிடம் முகமதா பேகம் கேட்டபோது, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து, போலி ஆவணங்கள் மூலம் ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துகளை அபகரித்துவிட்டதாக தஞ்சாவூர் குற்றப் பிரிவு போலீஸில் டிச. 27-ம் தேதி முகமதா பேகம் புகார் அளித்தார்.
அதன்பேரில், வித்யா சுமதி, செந்தில்குமார், பிரகாஷ், ரேவதி, பாஸ்கரன், நாகராஜன், பெட்ரிஷியா ஜோனி, செல்லப்பன், மணிகண்டன், ஆதித்யா, கவிதா, சுஜாதா ஆகிய 12 பேர் மீது 9 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.