

மதுரா: விருந்தாவனத்தில் யமுனை நதியில் இன்று (ஏப்.10) பிற்பகல் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர், மேலும் பலரை காணவில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் விருந்தாவனத்தில் யமுனை நதியில் இன்று பிற்பகல் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில், ஆறு பேர் உயிரிழந்ததாகவும், பலர் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் சந்திர பிரகாஷ் சிங், “இதுவரை ஆறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன மற்றவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படகில் பயணித்த அனைத்து சுற்றுலாப் பயணிகளும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்” என்று கூறினார்.
அந்தப் படகில் சுமார் 24-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பயணித்ததாகக் கூறப்படுகிறது. மாநிலப் பேரிடர் மீட்புப் படை, தேசியப் பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றுடன், சுமார் 50 உள்ளூர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
குலாப் என அடையாளம் காணப்பட்ட ஓர் உள்ளூர் நீச்சல் வீரர், இதுவரை சுமார் 15 பேரை ஆற்றிலிருந்து வெளியே மீட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
பிரதமர் இரங்கல்: இச்சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். அவர், ‘உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் படகு கவிழ்ந்ததால் ஏற்பட்ட இந்தத் துயரச் சம்பவம் குறித்து அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் தேவையான உதவிகளைச் செய்து வருகிறது" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.