புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ள நிலையில், 5-ம் தலைமுறை எஸ்யு-57 போர் விமானங்களை வழங்கும் திட்டத்தை ரஷ்யா முன்மொழிந்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய அரசின் பாதுகாப்பு நிறுவனமான ரோஸ்டெக்கின் தலைமை செயல் அதிகாரி செர்கே செமெசோவ் கூறியதாவது: 5-ம் தலைமுறை போர் விமானங்களுக்கான தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா தயாராக உள்ளது. இந்த திட்டத்தின் முதல்கட்டமாக, ரஷ்யாவில் தயாரிக்கப்படும் எஸ்யு-57 போர் விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படும்.
அடுத்தடுத்த கட்டங்களில் எஸ்யு-57 விமான தயாரிப்பு பணிகள் இந்தியாவுக்கு முழுமையாக மாற்றப்படும். இதில், இன்ஜின்கள், சென்சார்கள், போர்விமான உதிரிபாகங்கள் தயாரிப்புகளும் அடங்கும். பல தசாப்தங்களாக எந்தவொரு நெருக்கடியான காலக்கட்டங்களிலும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு சுமுகமாவே தொடர்ந்து வருகிறது.
எனவே, இந்தியா தொழில்நுட்பம் தொடர்பாக கேட்கும் எந்தவொரு கோரிக்கையும் ரஷ்யாவால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படும். இந்தியா மீது தடைகள் இருந்தபோதிலும் அதன் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு தேவையான ஆயுதங்களை நாங்கள் முன்பே வழங்கினோம். முந்தைய ஆண்டுகளைப் போலவே தற்போதும் அதனை தொடர்கிறோம்.
இந்தியாவுக்கு தேவையான அனைத்து ராணுவ உபகரணங்களையும் வழங்குவோம். எஸ்-400 அல்லது எஸ்யு-57 என இந்தியாவுக்கு என்ன நவீன தொழில்நுட்பம் தேவை என்றாலும் நாங்கள் அதனை ஆதரிக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு செர்கே தெரிவித்தார்.
இந்தியாவுக்கு ரஷ்யா வழங்கும் நவீன தலைமுறை போர் விமானங்களில் ஒற்றை இன்ஜினை கொண்ட எஸ்யு-75 செக்மேட் போர் விமானமும் அடங்கும். எஸ்யு-75 தயாரிப்பு ஆலையை நட்பு நாட்டில் அமைக்க ரஷ்யா ஆர்வம் காட்டி வருகிறது. அதற்கு இந்தியா மிகவும் தர்கரீதியான தேர்வாக இருக்கும்.
வருவாய் அதிகரிக்கும்: இது நடைமுறைக்கு வந்தால் பிரம்மோஸைப் போல இந்தியாவுக்கு பல பில்லியன் டாலர் ஏற்றுமதி வருவாயை உருவாக்கும் என்று இந்திய விமானப்படை தலைவரும், பாதுகாப்பு ஆய்வாளருமான விஜயந்தர் கே.தாக்கூர் தெரிவித்துள்ளார்.