

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 243 இடங்களில் என்டிஏ கூட்டணி 202 இடங்களில் வென்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளது. இதில் பாஜக 89, ஐக்கிய ஜனதா தளம் 85, லோக் ஜன சக்தி 19, பிற கட்சிகள் 9 இடங்களில் வென்றன. அதேசமயம் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி வென்ற தொகுதிகள் இம்முறை 35 ஆக குறைந்தது.
இந்த முடிவுகளின் பின்னணியில் பாஜகவுக்காக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் முக்கியப் பங்காற்றி உள்ளனர். இதன் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
தேர்தல்களில் ஆர்எஸ்எஸ் நேரடியாகப் பங்கு பெறாவிட்டாலும் தனது அரசியல் பிரிவான பாஜகவுக்கு தேர்தல் காலத்தில் பணியாற்றுகிறது. அந்த வகையில், பிஹார் தேர்தலுக்காகவும் முன்கூட்டியே களம் இறங்கிய ஆர்எஸ்எஸ் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பணியாற்றியது. இதற்காக, ‘மிஷன் திரிசூல்’ என்ற திட்டத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சுமார் 20,000 பேர் பிஹார் முழுவதும் தீவிரமாகச் செயல்பட்டனர்.
இவர்கள் வாக்குச்சாவடிகள் மட்டத்தில் சென்று என்டிஏ மற்றும் எதிர்க்கட்சி வாக்காளர்களை அடையாளம் கண்டனர். இவர்களிடம் என்டிஏவுக்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்கப் பணியாற்றினார். இந்து ஒற்றுமை, வளர்ச்சி, நல்லாட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆர்ஜேடி ஆட்சியின் சட்டம் ஒழுங்கு மற்றும் காட்டு ராஜ்ஜியம் குறித்து நினைவூட்டினர்.
என்டிஏ ஆதரவாளர்களை தேர்தல் நாளில் தவறாமல் வாக்களிக்கத் தூண்டினர். வாக்குப்பதிவு குறைவாக இருந்த பகுதிகளில், மக்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் சென்றனர். இதற்கு முன், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி சட்டப்பேரவை தேர்தல்களில் இதேபோன்ற உத்தியால் பாஜக பயனடைந்தது. எனவே, பிஹாரிலும் இதே வகையில் ஆர்எஸ்எஸ் செயல்பட்டது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, "பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஓபிசி பிரிவினரை நாங்கள் இலக்கு வைத்தோம். ஏனெனில் இந்த மூன்று பிரிவினரும் தொடர்ந்து பாஜகவை ஆதரித்து வருகின்றனர். பாஜக மற்றும் என்டிஏவை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதை அவர்களிடம் விளக்கினோம்.
கடந்த தேர்தல்களில் என்டிஏ வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்த தொகுதிகளில் கடினமாக உழைத்தோம். சீமாஞ்சல் உள்ளிட்ட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் இந்து வாக்குகளை ஒருங்கிணைப்பதில் இறங்கினோம். இதற்காக, தொலைபேசி அழைப்பு, வீடு வீடாகச் சென்று சந்திப்பது, சிறிய கூட்டங்கள் நடத்துவது என வாக்குகளைச் சேரித்தோம்.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 10 முதல் 20 தொண்டர்களும் தன்னார்வலர்களும் நிறுத்தப்பட்டனர். இவர்கள் மூன்றாகப் பிரிந்து என்டிஏ ஆதரவாளர்கள், எதிர்க்கட்சி ஆதரவாளர்கள், சந்தேகம் அல்லது தயக்கம் காட்டுவோர் ஆகிய மூன்று பிரிவினரையும் நேரடியாக அணுகினர். இவர்களை வாக்குச் சாவடிகளுக்கு அழைத்து வருவது, வரிசையில் நிற்க வைப்பது, முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு உதவுவது போன்ற பணிகளில் ஈடுபட்டனர். வாக்குச் சாவடிகளில் காலை 5 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை நாங்கள் இருந்தோம்” என்று தெரிவித்தனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிற பிரிவுகளான விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், பாரதிய மஸ்தூர் சங்கம், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகளின் உறுப்பினர்களும் பல்வேறு வகையில் செயல்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், “நாங்கள் எந்தக் கட்சிக்காகவும் பணியாற்றவில்லை, மாறாக வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நல்ல வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யவும் பணியாற்றுகிறோம்” என்று ஒவ்வொரு தேர்தலிலும் கூறுகிறார்.