கேரள இல்லத்தில் டெல்லி போலீஸ் சோதனை: தவறை ஒப்புக்கொள்ளாவிடில் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்போம்- முதல்வர் உம்மன் சாண்டி எச்சரிக்கை

கேரள இல்லத்தில் டெல்லி போலீஸ் சோதனை: தவறை ஒப்புக்கொள்ளாவிடில் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்போம்- முதல்வர் உம்மன் சாண்டி எச்சரிக்கை
Updated on
2 min read

டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் உள்ள உணவகத்தில் பசு இறைச்சி பரிமாறப்படுவதாக டெல்லி காவல்துறை கட்டுப் பாட்டு அறைக்கு திங்கள்கிழமை மாலை புகார் வந்தது. இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் இந்தப் புகாரை அளித்தார்.

இதையடுத்து சுமார் 20 போலீஸார் உடனே கேரள இல்லம் சென்று அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இதுவே பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. இதற்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் கடிதம் எழுதினார்.

இந்நிலையில் இந்த விவ காரம் குறித்து கேரள அமைச் சரவை நேற்று விவாதித்தது. அமைச்சரவை கூட்டத்துக்குப் பின் உம்மன் சாண்டி செய்தி யாளர்களிடம் கூறும்போது, “மாநில அரசுக்கு சொந்தமான விருந்தினர் இல்லத்தில் அதிகாரி களின் அனுமதி இல்லாமல் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது வரம்பு மீறிய மற்றும் சட்டவிரோதமான செயல். மேலும் இது மத்திய மாநில உறவுகளை பாதிக்கும்.

சட்டப்படி தங்கள் கடமையை செய்ததாக டெல்லி போலீஸ் அளித்துள்ள விளக்கத்தை ஏற்க முடியாது. டெல்லி அரசின் கருத்தையே மத்திய அரசு கூறுமானால் இந்த விவகாரத்தில் கேரளா சட்டப்பூர்வ நடவடிக்கையில் இறங்கும். தவறை ஒப்புக்கொண்டால் கேரளா சமாதானமாக செல்ல தயாராக உள்ளது.

டெல்லியில் தடை செய்யப் பட்டுள்ள பசுவின் இறைச்சியை கேரள இல்லத்தில் பரிமாற வில்லை. எருமையின் இறைச் சியே பரிமாறப்பட்டது. இது தொடர்ந்து பரிமாறப்படும். இதை யார் எதிர்த்தாலும் அதை பொருட்படுத்தப் போவதில்லை” என்றார்.

இந்த விவகாரத்தில் கேரள அரசுக்கு ஆதரவாக பேசிய டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆகியோருக்கும் சாண்டி நன்றி தெரிவித்தார்.

புகார் அளித்தவர் கைது

இதனிடையே கேரள இல்லத் தில் பசு இறைச்சி பரிமாறப் பட்டதாக பொய் புகார் அளித்த தாக, இந்து சேனா தேசிய தலைவர் விஷ்ணு குப்தாவை டெல்லி போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

விஷ்ணு குப்தா மீது இந்திய தண்டனைச் சட்டம் 182-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப் படும் என்று டெல்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பாஸ்ஸி நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

இதனிடையே இந்த விவகாரத் தில் டெல்லி காவல்துறை ஆணையர் பாஸ்ஸியை பதவி நீக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கேரள இல்லத்தில் போலீஸ் நடத்திய சோதனை சட்டவிரோதமானது. இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.

மீண்டும் மாட்டிறைச்சி

இதனிடையே கேரள இல்லத் தில் நேற்று மதியம் மீண்டும் மாட்டிறைச்சி பரிமாறப்பட்டது.

இங்கு போலீஸார் நடத்திய சோதனை தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில் நேற்று ஏராளமானோர் உணவகத்தில் குவிந்தனர்.

இதுகுறித்து உணவக ஊழியர் ஒருவர் கூறும்போது, “150 பேர் சாப்பிடும் அளவுக்கு மாட்டுக்கறி தயார் செய்திருந்தோம். மதியம் 12.45 மணிக்கு பரிமாறத் தொடங்கினோம். 45 நிமிடத்தில் ஃப்ரை, கறி அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டது” என்றார்.

உணவகத்தில் உள்ள மெனு பலகையில் மாட்டிறைச்சி ஃப்ரை, கறி கிடைக்கும் என்ற தகவலில் அடைப்புக்குறிக்குள் ‘எருமை இறைச்சி’ என்று எழுதப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in