கோவிட்-19 சிகிச்சைக்கு ரெம்டெசிவிர், ஃபாவிபிராவிர் மருந்துகளை உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் அனுமதி அளித்தது ஏன்?- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

உச்ச நீதிமன்றம்.
உச்ச நீதிமன்றம்.
Updated on
1 min read

ரெம்டெசிவிர், ஃபாவிபிராவிர் மருந்துகளை உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் இல்லாமல், கோவிட்-19 சிகிச்சைக்குப் பயன்படுத்த அனுமதி அளித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கோவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களுக்குச் சிகிச்சையளிக்க ரெம்டெசிவிர், ஃபாவிபிராவிர் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், வைரஸ் தடுப்பு மருந்துகள், கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதில் அவற்றின் செயல்திறன் மருத்துவ நிபுணர்களிடையே விவாதத்திற்குரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.

மேலும், இதற்கு உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இது தொடர்பான வழக்கு ஒன்றில் கோவிட்-19க்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகளாக ரெம்டெசிவிர், ஃபாவிபிராவிர் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக செப்டம்பர் 16 அன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இது தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.சர்மாவால் தொடரப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்திற்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அக்டோபர் 15 ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு (WHO) அறிக்கையில் ரெம்டெசிவிர், ஃபாவிபிராவிர் ஆகிய மருந்துகள் எங்கும் அதிகாரபூர்வமாக கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்துகளாக அங்கீகரிக்கப்படவில்லை என்று சர்மாவின் மனு சுட்டிக்காட்டியது.

மேலும், கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக ரெம்டெசிவிர், ஃபாவிபிராவிர் ஆகிய மருந்துகள் பயன்படுத்தப்படுவதாகக் கூறி இம்மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்த 10 இந்திய மருந்து நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ தரப்பில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

''உலக சுகாதார அமைப்பு (WHO) அறிக்கையில், ரெம்டெசிவிர், ஃபாவிபிராவிர் ஆகிய மருந்துகள் எங்கும் அதிகாரபூர்வமாக கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்துகளாக அங்கீகரிக்கப்படாத நிலையில் இந்திய அரசு எதன் அடிப்படையில் இந்த ஒப்புதலை வழங்கியது?

இதுகுறித்து மத்திய அரசுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். இந்த மனு தொடர்பாக நான்கு வாரங்களில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்'' என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in