கரோனா வைரஸ் பாதிப்பு 5 மாநிலங்களில் அதிகரிப்பு

கரோனா வைரஸ் பாதிப்பு 5 மாநிலங்களில் அதிகரிப்பு
Updated on
1 min read

புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிகரித்து உள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இந்நிலையில் கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி ஆகிய 5 மாநிலங்களில் புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்து வருகின்றனர் என்று தெரியவந்துள்ளது. புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 50 சதவீதம் இந்த 5 மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று தெரிய வந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 23 முதல் 29-ம் தேதி வரையான கால கட்டத்தில் புதிதாக கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 83,232-ஆக இருந்தது. இது அக்டோபர் 21 முதல் 27 வரையிலான கால கட்டத்தில் 49,909-ஆகக் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

நாட்டில் தினந்தோறும் சராசரியாக 11 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த 26-ம் தேதி நாட்டில் புதிதாக 36,470 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. ஜூலை 17-ம் தேதி முதல் தற்போது வரையிலான 3 மாத கால கட்டத்தில் கண்டறியப்பட்ட மிகவும் குறைந்த அளவிலான வைரஸ் தொற்று எண்ணிக்கை இதுவாகும்.

எனினும் கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் தினந்தோறும் புதிதாக கரோனா தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. கடந்த 3 நாட்களில் அங்கு கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் கூறும்போது, “நாட்டில் அதிர்ஷ்டவசமாக ஒரு சில மாநிலங்களைத் தவிர்த்து கரோனா நோயாளிகளின் எண்ணிக்கைக் குறைந்து வருகிறது. இதர நாடுகளில் கரோனா பாதிப்பின் இரண்டாவது அலை வீசி வருகிறது. அது முதல் அலையை விட மிக மோசமாக உள்ளது. அவ்வாறு இந்தியாவில் நிகழவில்லை. எனவே, தற்போது அடுத்தகட்ட நடவடிக்கைகள் மூலம் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in