Last Updated : 17 Oct, 2020 06:14 PM

 

Published : 17 Oct 2020 06:14 PM
Last Updated : 17 Oct 2020 06:14 PM

பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோரின் படங்கள் பொது இடங்களில் வைக்கப்படும்: யோகி ஆதித்யநாத் உறுதி

பல்ராம்பூர்

பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோரின் படங்கள் பலரும் பார்க்கும்படி பொது இடங்களில் வைக்கப்படும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்நாத் தெரிவித்துள்ளார்.

உ.பி.யில் 'மிஷன் சக்தி' பிரச்சாரத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 'ஜீரோ சகிப்புத்தன்மை' மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.

பல்ராம்பூர் மாவட்டத்தில் 22 வயதான தலித் பெண், இரு ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். ஹாத்ரஸில் மற்றொரு தலித் பெண் கூட்டுப் பலாத்காரத்தால் இறந்த பிறகு அவரது குடும்பத்தினர் அனுமதியின்றி போலீஸாரால் எரிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது நிர்வாகத்தின் அக்கறையின்மையைக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டின.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிராகப் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு மற்றும் கவுரவத்தை உறுதி செய்வதை மையமாகக் கொண்டு 'மிஷன் சக்தி' பிரச்சாரத்தை இன்று தொடங்கினார்.

இதுகுறித்து யோகி ஆதித்யநாத் கூறியதாவது:

துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நவராத்திரி திருவிழா தொடங்கியுள்ளது. இந்நேரம் பல்ராம்பூரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டு உயிரிழந்த பெண்ணுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

மாநிலத்தில் இனி பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்பவர்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவார்கள். மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை இனி சகித்துக்கொள்ள முடியாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக இனி ஜீரோ சகிப்புத்தன்மைதான் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

பெண்களின் கவுரவம் மற்றும் சுய மரியாதைக்குப் பங்கம் விளைவிப்பவர்கள் மாநிலத்தில் இருக்கவே தகுதியற்றவர்கள். இதுபோன்ற குற்றங்களைச் செய்பவர்கள் சமுதாயத்தின் மீது ஒரு கறைபடிந்தவர்களாக இருக்கிறார்கள். அரசாங்கம் அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கும்.

பசந்த் நவராத்திரி வரை அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்தப் பிரச்சாரம் தொடரும். 'மிஷன் சக்தி'யின் முதல் கட்டம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கவுரவத்தை உறுதி செய்வதில் விழிப்புணர்வைப் பரப்புவதில் கவனம் செலுத்தும்.

இரண்டாம் கட்டமாக 'ஆபரேஷன் சக்தி' நடவடிக்கைகளில், பெண்களை ஈவ் டீசிங் செய்பவர்களை குறிவைத்து அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படும். அல்லது அத்தகைய குற்றவாளிகளைச் சீர்திருத்தப் பாதையில் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதுபோன்ற முயற்சிகளிலும் அவர்கள் திருந்தாவிட்டால், அவர்கள் சமூகப் புறக்கணிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்தவரின் படங்கள் பொது இடங்களில் பலரும் பார்க்கும்படி வைக்கப்படும்.

இந்த ஆண்டு ராம் லீலா மற்றும் துர்கா பூஜா விழா நாட்கள் முடியும் வரையிலும் அரசின் 24 துறைகளின் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டிக்கும் 'மிஷன் சக்தி' செய்தி பரப்பப்படும். பெண்களின் பாதுகாப்பு, சுய மரியாதை மற்றும் தன்னம்பிக்கை பற்றிய செய்தியைப் பரப்புவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் மத்தியில் 100 முன்மாதிரிகள் அடையாளம் காணப்படும். பிரச்சாரத்தின் போது பல்வேறு நிகழ்வுகள் வரிசையாக நடைபெற உள்ளன.

சக்தியின் அடையாளம் பெண்கள் என்பதால் பாலினச் சமத்துவமும் பெண் குழந்தையின் பாதுகாப்பும் வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டியது முக்கியம். பெண் கரு ஒரு சாபக்கேடாக கருதப்படுகிறது. இது தவறானதாகும். குழந்தைத் திருமண நடைமுறைகளை நாம் பகிரங்கமாக கண்டிக்க வேண்டும். பெண் குழந்தையைப் பாதுகாப்பதும், பெண்களுக்கு மரியாதை கொடுப்பதும் வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டும்’’.

இவ்வாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x