Published : 17 Oct 2020 06:45 AM
Last Updated : 17 Oct 2020 06:45 AM

கட்சிகளுக்கு நன்கொடை; முதலிடத்தில் டாடா குழுமம்: பாஜக.வுக்கு ரூ.698 கோடி

புதுடெல்லி

ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) வெளியிட்ட அறிக்கையின்படி அதிகபட்ச நன்கொடை திரட்டிய கட்சியாக பாஜக திகழ்கிறது. 2018-19-ம் ஆண்டில் இக்கட்சிக்கு கிடைத்த நன்கொடை ரூ.698 கோடியாகும். இரண்டாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் திகழ்கிறது. இக்கட்சிக்கு கிடைத்த நன்கொடை ரூ.122.50 கோடியாகும்.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காகவே டாடா குழுமம் முன்னேறிய தேர்தல் அறக்கட்டளை என்ற அமைப்பை நிர்வகிக்கிறது. இந்த அமைப்புதான் அதிகளவில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடை அளவு 2004-ம் ஆண்டில் இருந்து 2012-ம் ஆண்டு வரையான காலத்தில் இருந்த அளவைக் காட்டிலும் 2018-19ம் ஆண்டில் 131 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த 2012-13-ம் ஆண்டு முதல் 2018-19-ம் ஆண்டு வரையிலான காலத்தில் அதிகபட்ச நன்கொடையை திரட்டிய கட்சியாக முதலிடத்தில் திகழ்கிறது பாஜக. மொத்த அரசியல் கட்சிகள் திரட்டிய நன்கொடையில் 82 சதவீதத்தை இக்கட்சியே பெற்றுள்ளது.

ரூ.20 ஆயிரத்துக்கும் மேலாக பெறப்படும் நன்கொடை விவரத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. நன்கொடை அளித்த தொழில் நிறுவனங்கள் விவரம், பான் எண், பண பரிவர்த்தனை வழிமுறை உள்ளிட்ட விவரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

பான் எண் உள்ளிட்ட உரிய விவரம் இல்லாமல் ரூ.13.36 கோடி தொகை 274 நிறுவனங்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் உரிய தகவலை முகவரியுடன் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x