

உ.பி.யைப் போலவே காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானிலும் சட்டத்தின்படி ஆட்சி நடக்கவில்லை. அங்கு நடப்பதும் காட்டாட்சிதான் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தானில் தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ராஜஸ்தான் அரசாங்கத்திற்கு தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாயாவதி தனது ட்விட்டர் பதிவில் இன்று கூறியுள்ளதாவது:
"உ.பி.யைப் போலவே காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானிலும் ஒவ்வொரு வகையிலும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அப்பாவி மக்கள் கொலை, தலித்துகள் மற்றும் பெண்கள் மீதான அட்டூழியங்கள் உச்சத்தில் உள்ளன. வேறுவிதமாகக் கூறினால், ராஜஸ்தானில் சட்டத்தின்படி ஆட்சி நடக்கவில்லை. ஆனால் ஒரு 'ஜங்கிள் ராஜ்' (காட்டாட்சி) தான் நடக்கிறது. இது வெட்கக்கேடானது. கவலை அளிக்கும் இந்நிலைக்காக ராஜஸ்தான் அரசுக்கு எனது கண்டனங்கள்.
ஆனால், தங்கள் அரசாங்கத்தை விமர்சித்து இறுக்குவதற்குப் பதிலாக, காங்கிரஸ் தலைவர்கள் மவுனம் காத்து வருகின்றனர். இதுவரை அவர்கள் (காங்கிரஸ்) பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தது எல்லாம் வாக்கு அரசியலுக்காக மட்டுமே தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை இது குறிக்கிறது. இதுபோன்ற நாடகத்தைக் காணும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இது மக்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனையாகும்''.
இவ்வாறு மாயாவதி தெரிவித்துள்ளார்.