

பெண் குழந்தை பெற்றெடுத்த காரணத்துக்காக ரியாத்தில் உள்ள கணவன் தொலைபேசியிலேயே மனைவியை ‘தலாக்’ கூறி விவாக ரத்து செய்ததை இஸ்லாமிய சட்டம் அனுமதிக்காது என்று தாருல்-உலூம்-தியோபாந்த் என்ற செல்வாக்குள்ள இஸ்லாமிய பாடசாலை கடுமையாகக் கண்டித்துள்ளது.
முசாபர்நகரைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் தனது மனைவி 4-வது குழந்தையாக பெண் குழந்தையை பெற்றெடுத்ததையடுத்து முசாபர் நகரில் உள்ள தனது மனைவியை தொலைபேசியில் அழைத்து ‘தலாக்’ (விவாகரத்து) செய்துள்ளார்.
இந்த விவகாரம் சமூக பஞ்சாயத்துக்கு சென்றது அங்கு இந்த தொலைபேசி தலாக் ஏற்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த சிலர் இந்த செல்வாக்கு மிகுந்த பாடசாலையை அணுகியுள்ளனர்.
இது குறித்து செமினரியின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் உஸ்மானி கூறும்போது, “குழந்தை ஆணா, பெண்ணா என்பதை எந்த ஒரு பெண்ணும் தீர்மானிப்பதல்ல. மேலும் இஸ்லாமைப் பொறுத்த வரை ஆணும்-பெண்ணும் சமமே. எனவே பெண் குழந்தை பெற்றெடுத்ததற்காக தலாக் கொடுப்பது முற்றிலும் ஏற்க முடியாத ஒன்று, இஸ்லாமிய மதத்தைப் பொறுத்தவரை இது பாவகாரியமாகும்” என்றார்.
மேலும், “ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு தனது வாழ்க்கைத் துணையை விவாகரத்து செய்யும் சிந்தனையே மிகவும் இழிவானது. இதுவே இந்த சமூகத்தின் பெண்கள் மீதான அக்கறை என்னவென்பதை புரியவைக்கிறது. இது மனிதத்தன்மையற்ற செயல், கணவன் - மனைவி உறவுகள் குறித்த இஸ்லாத்தின் புனித உணர்வுக்கு எதிரானது.
உள்ளூர் பஞ்சாயத்து, பெண்களின் உரிமையை கணக்கிலெடுத்துக் கொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது. இஸ்லாமைப் பொறுத்தவரை இந்த தலாக் முழுதும் கண்டனத்துக்குரியது, ஏற்றுக் கொள்ள முடியாதது” என்றார்.
செமினரியின் இந்தக் கருத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.