

ஹாத்ரஸின் பலியான பெண்ணின் சகோதரர் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவருக்கு இடையே நூறு முறை கைப்பேசி உரையடல்கள் நடைபெற்றுள்ளன. உத்திரப்பிரதேசம் சிறப்பு படை(எஸ்ஐடி) விசாரித்து வரும் இவ்வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 14 இல் உயர் சமூகத்தின் 4 இளைஞர்களால் ஹாத்ரஸின் கிராமத்து தலீத் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டிருந்தார். இதில் தாக்குதலுக்கும் உள்ளானவர் செப்டம்பர் 20 இல் டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அப்பெண்ணின் உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்காதது உள்ளிட்ட பல்வேறு தவறுகள் இவ்வழக்கில் உ.பி போலீஸாரால் செய்யப்பட்டிருந்தது. இதனால், அரசியல் மற்றும் சமூக அமைப்புகளால் ஹாத்ரஸில் போராட்டம் தொடர்கிறது.
இதில் பலியான தலீத் பெண், 11 நாள் சிகிச்சைக்கு பின் சற்று நினைவு திரும்பி போலீஸாரிடம் பேசியிருந்தார். அப்போது தான் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதையும், இதற்கு ஒரு மாதம் முன்பாகவும் அதன் முயற்சி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வாக்குமூலம் ஒன்று மட்டுமே பாலாத்காரத்தின் சாட்சியாக தற்போது அமைந்துள்ளது. இதன் அடிப்படையில் கைதான நால்வரும் தான் அங்கு சம்பவம் நடந்த போது இல்லை என நிரூபிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்து வரும் உ.பியின் எஸ்ஐடிக்கு பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதில் முக்கியமாக பலியான பெண்ணின் சகோதரர் மற்றும் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சந்தீப்புடன் சுமார் 100 முறை கைப்பேசியில் உரையாடல்கள் நடந்திருப்பது தெரிந்துள்ளது.
இதனால், ஹாத்ரஸ் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த உரையாடல்கள் அப்பெண் உயிருடன் இருந்த போது
கடந்த வருடம் அக்டோபர் 2019 முதல் இந்த வருடம் மார்ச் வரையில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், இருவரது குரல்களையும் உறுதிசெய்யும் பரிசோதனையை எஸ்ஐடி துவக்கி உள்ளது. இதன் பிறகு கைப்பேசிகளின் சுமார் ஐந்து மணி நேர உரையாடல்கள் மீதான விசாரணையையும் எஸ்ஐடி செய்ய உள்ளது.
இதனிடையே, சிபிஐ விசாரணைக்கு இவ்வழக்கு பரிந்துரைக்கப்பட்டதை பாதிக்கப்பட்ட குடும்பத்தார் ஏற்க மறுத்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலான விசாரணையில் மட்டுமே தமக்கு நியாயம் கிடைக்கும் என நம்பி அதற்காக வலியுறுத்தி வருகின்றனர்.