வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: பல மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம்; சாலை மறியல்

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: பல மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம்; சாலை மறியல்
Updated on
2 min read

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய வேளாண் தொடர்பான 3 மசோதாக்களை மத்திய அரசு மழைக்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வந்தது.

இந்த மசோதாவுக்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மக்களவையில் மத்திய அரசுக்குப் பெரும்பான்மை இருப்பதால், எளிதாக நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து விவாதத்தில் பங்கேற்றன. எனினும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே மசோதாக்கள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரயில் மறியல் போராட்டம், பாரத் பந்த் நடத்தினர். எனினும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 வேளாண் மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தநிலையில் நாட்டின் பல பகுதிகளில் இன்று விவசாயிகள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளிலும் இன்று போராட்டம் நடைபெற்றது. ஹுப்ளி, தார்வார்டு உட்பட பல நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.


கர்நாடக ராஜ்ய ரயித்தா சங்கம் அழைப்பு விடுத்திருந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருந்தன.

ஷிவமோகா உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

பஞ்சாபிலும் முதல்வர் அம்ரீந்தர் சிங் பகத்சிங் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்த பிறகு அங்கே தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார்.

இதுபோலவே உ.பி. உட்பட வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in