

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கும் காலத்தில், நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை இந்த ஆண்டு நடத்த மத்திய அரசுக்கு அனுமதியளித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி 6 மாநிலங்களின் அமைச்சர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் அமைச்சர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த 6 மாநிலங்களும் பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களாகும்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜேஇஇ, நீட் நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 17-ம் தேதி அளித்த தீர்ப்பில், நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்த எந்தவிதமான தடையும் இல்லை. மாணவர்களின் ஓராண்டை வீணாக்கக் கூடாது என்று உத்தரவிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, நுழைவுத் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு அமைப்பு (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பில், “திட்டமிட்டபடி செப்டம்பர் 1 மற்றும் 6 தேதிகளில் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வும், செப்டம்பர் 27-ம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வும், செப்டம்பர் 13-ம் தேதி நீட் (யுஜி) நுழைவுத் தேர்வும் நடத்தப்படும்.
99 சதவீத மாணவர்களுக்கு அவர்கள் கேட்ட இடத்திலேயே தேர்வு மையம் வழங்கப்பட்டுள்ளது. சில மாணவர்களுக்கு அதிருப்தி இருக்கிறது அதுவும் களையப்படும்” என அறிவித்தது.
ஆனால், கரோனா காலத்தில் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்தக்கூடாது. தீபாவளிக்குப் பின் நடத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார்.
மேலும், பல்வேறு மாநில முதல்வர்களும், காங்கிரஸ் கட்சியும் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் கடந்த 17-ம் தேதி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி பாஜக ஆளாத 6 மாநிலங்களின் அமைச்சர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அமைச்சர் மோலாய் காட்டக், ஜார்க்கண்ட் அமைச்சர் ராமேஷ்வர் ஓரான், ராஜஸ்தான் அமைச்சர் ரகு ஷர்மா, சத்தீஸ்கர் அமைச்சர் அமர்ஜீத் பாகத், பஞ்சாப் அமைச்சர் பி.எஸ்.சித்து, மகாராஷ்டிரா அமைச்சர் உதய் ரவிந்திர சாவந்த் ஆகியோர் வழக்கறிஞர் சுனில் பெர்னான்டஸ் மூலம் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.