மூணாறு நிலச்சரிவு;12 நாட்களுக்கு பிறகு 9- வயது சிறுவனின் உடல் மீட்பு: பலி எண்ணிக்கை 62

மூணாறு நிலச்சரிவு;12 நாட்களுக்கு பிறகு 9- வயது சிறுவனின் உடல் மீட்பு: பலி எண்ணிக்கை 62
Updated on
1 min read

கேரள மாநிலம் மூணாறு அருகே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இன்று 9- வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்தது. குறிப்பாக இடுக்கி, பத்தனம்திட்டா, வயநாடு போன்ற பகுதிகளில் கனமழை விடாது பெய்தது.

மூணாறு கிராமப் பஞ்சாயத்திலிருந்து 28 கி.மீ. தொலைவில் ராஜமலை செல்லும் பகுதியில் பெட்டிமடா பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தற்காலிகக் குடியிருப்பு அமைத்து 80-க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர்.

நேமக்கடா பகுதியில் ஆகஸ்ட் 7-ம் தேதி திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்த 20 வீடுகளும் மண்ணில் புதைந்தன. மீட்புப்பணியில் தீயணைப்பு படையினர், போலீஸார், பேரிடர் மீட்புப்படையினர் வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நிலச்சரிவு நடந்த பகுதியில் கனமழை பெய்ததாலும், மீட்பு வாகனங்கள் செல்லமுடியாததாலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

பாறைகளும், மண்ணும் சேர்ந்து 20 வீடுகளையும் மூடின. இதனால் மண் அள்ளும் எந்திரமும் மீட்புப்பணியில் ஈடுபடுவதில் சி்க்கல் நீடித்தது.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. பல நாட்கள் நடந்த மீட்பு பணியில் 61 உடல்களை பேரிடர் மீட்புப்படையினர் மீட்டனர். எனினும் அங்கு முழுமையாக மீட்பு பணிகள் முடிவடையவில்லை.

புதையுண்ட பகுதியில் இருந்து இன்று 9- வயது சிறுவனின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பெருமளவு மீட்பு பணிகள் முடிவடைந்து விட்டபோதிலும் வேறு ஏதேனும் உடல்கள் உள்ளதா என தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in